பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 30 novembre 2012

கல்வியின் ஏற்றமும், இறக்கமும்

                                                       Étudiants en amphi


"சீனா தேசம் சென்றாவது கல்வி பயிலுங்கள்"  - இறைத்தூதர் முகமது நபி  சல் அவர்கள்

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை -  வள்ளுவர்
(பொருள்: கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு இணையான செல்வம் ஏதும் இல்லை).

 மேலே குறிப்பிட்ட வரிகள் கல்விக்கு மனித சமுதாயம் கொடுத்த முக்கியத்துவத்தை விளக்குகின்றன. அதிலும் குறிப்பாக நம் பாரத நாடு கல்விக்கு அளித்த  முக்கியத்துவம் போல் உலகில் வேறு எந்த நாடும் தந்தது கிடையாது என நாம் பெருமிதத்துடன் சொல்லலாம். அரசனாக இருந்தாலும் சரி ஆண்டியாக இருந்தாலும் கல்வி எந்த முறையில் யாரிடம் கற்க வேண்டும் என்பதில்கூட ஒரு நடைமுறையை முறைப்படுத்தி வைத்து இருந்தார்கள். இதிகாச காலத்திலேயே தற்போது உள்ள PRE  K..G. எனப்படும் பால பாடத்தைக் கற்பிக்கும் முறை இருந்தது. எடுத்துக்காட்டாக அரண்மனையில் இருந்த இராமர், இலட்சுமணன் போன்றோர் தம் பால பாடத்தை அரண்மனையில் வசிட்ட முனிவரிடம் பயின்று பிறகு  மேற்படிப்புக்காக விசுவாமித்திர மகரிஷி வசம் ஒப்படைக்கப்பட்டனர் என்று இதிகாசம் நமக்குத்  தெளிவு படுத்துகிறது.
நம் பாரத பூமியில் உலகிலேயே முதன் முறையாகதட்சசீலம் நாலந்தா  காஞ்சி,  நாகர்ஜுனா, உஜ்ஜயினி போன்ற பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன.   

 திண்ணைப் பள்ளிக்கூடம்:


குருகுலம் சென்று பயிலும் முறைபோல திண்ணைப் பள்ளிக்கூட நடைமுறையும் நம் நாட்டில் இருந்து வந்தது. ஆசிரியரின் வீட்டுத்  திண்ணையில்தான் வகுப்பு நடைபெறும். மாணவர்கள் ஐந்து  வயது முதல் பள்ளிக்குச்  செல்லத் தொடங்குவர். மாணவர்கள் எழுத, படிக்க காகிதமோ, சிலேட் போன்றவை அப்போது புழக்கத்தில் வரவில்லை. மணலில்தான் எழுதக் கற்றுக் கொண்டார்கள். பிறகு  எழுத்தாணியால் ஓலைச்சுவடியில் எழுதக் கற்க வேண்டும். காலை ஐந்து மணிக்கே பள்ளிக்கு ஓலைக்கட்டை எடுத்துச் சென்று முந்தய நாள் ஆசிரியர் சொல்லித் தந்ததை மனப்பாடமாக ஒப்புவிக்க ஆசிரியர் வீட்டினுள் அமர்ந்தபடி கேட்டு கொள்வார். பிறகு ஆறு மணி அளவில் மாணவர் அனைவரும் குளம், வாய்க்கால் போன்ற இடம் நோக்கிச் சென்று காலைக்கடன் முடித்துக் குளித்துப் பின் எழுதுவதற்காக மணலை  எடுத்து வந்து பள்ளியில் பரப்பி எழுதக் கற்பார்கள். மதியம் 12 மணி வரை பாடம் பயில்வர் ; உணவு இடைவேளையாக 12 மணிமுதல் 3 மணிவரை செல்வர் ;  மீண்டும்  3 மணிக்கு வந்து பாடம் பயில ஆரம்பித்து 7 மணிவரை கல்வி கற்பார்கள்.

இப்படித்  திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தாய்மொழியில் படிப்பதை உணர்ந்து படித்து அறிவு, பண்பாடு, பண்பு என அனைத்திலும் சிறந்து விளங்கிய நம்மவரைப் பார்த்து விதி லேசாக முகத்தைத் திருப்பியது. ஆம் வந்தார் , நம் பண்பாடு, தாய் மொழிக்கல்வியை அழித்து நம் உடம்பில் அந்நிய மொழியின் மோகத்தை ஊட்டி நம்மை அடிமையாக்க  ஒருவர் .  அவர் தான் தாமஸ்    பெபிங்க்டன்   மெக்காலே. 1800 -இல் பிறந்த இவர்  1834 சூன் மாதம் இந்தியா வந்து குறுகிய காலத்திலேயே  ஒரு பகிரங்க அறிவிப்பை வெளியிட்டு அதை இங்கிலாந்துக்கு அனுப்பி ஒப்புதல்  பெற்று நிறைவேற்றினார் .அதுதான் ஆங்கில வழிக்கல்வி. குமாஸ்தாக்களை உருவாக்கும்  சொன்னதைச்  செய்யும் அடிமை முறைக்கல்வி. இதனால் தாய் மொழியில் கல்வி பயிலும் முறையானது அழியத்தொடங்கியது. நம்மவர்களும் இயற்கையிலேயே இருக்கும் வெளிநாட்டு மோகத்தில் தாய் மொழிக்கல்வியைப்  புறக்கணித்து ஆங்கில வழிக் கல்வியை ஆராதிக்கத் தொடங்கினர்.இன்னும் சிலரோ ஒருபடி மேலே சென்று மேல்படிப்புக்காக மேல்நாடு  நோக்கியும் போகத்  தலைப்பட்டனர். என்ன செய்வது பல்லாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே பல மேல் நாட்டு மாணவர்களுக்கும் நாலந்தா பல்கலைக்கழகத்தில்  கல்வியறிவு புகட்டியது நம் முன்னோர் என்கிற உண்மையை வெளிநாட்டு மோகம் மறைத்துவிட்டது.

இந்தியக்  கல்வி முறையானது தற்போதும் உலகளவில்  அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் நம் முன்னோர்கள் போட்ட பாதை அப்படி. உலகில் எங்கும் இல்லாத வகையில்   காலை எழுந்தவுடன் படிப்பு என்று கூறி பிரம்மமுகூர்த்தம் என்னும் அதிகாலை வேளை தான் ஆழ்ந்த அமைதியான படிப்புக்கு ஏற்ற வேளை என்று படிக்கவும் ஒரு நேரத்தை குறித்தனர். மேலும் மனக்கணக்கு என்னும் முறையில் எப்படிப்பட்ட கணிதப்  புதிரையும் பேனா பேப்பர் துணையின்றி மனத்தினுள் போட்டு உடனே பதிலைச்  சொல்லும் முறையும் நம் கல்வியில் மட்டுமே உண்டு. இதனால் சாதாரண கணக்கு போடுவதற்கும் மேலை நாட்டு மாணவர்கள் calculator தேவை என்றிருக்க, நம் மாணவர் எவ்விதத்  துணையின்றி உடனடியாகப்  பதிலைக்  கூற முடியும். அதற்கும் காரணம் மனக்கணக்கு முறைதான். அதேபோல எவ்வளவு பெரிய கடினமான பாடமாக இருந்தாலும் வாய்விட்டுச்  சப்தமாக படிப்பதால் நாம் படிக்கும் வார்த்தைகள் தெளிவாக நாமே கேட்டு, மனத்தில் இருத்தி, பின்னர் மனப்பாடமாக ஒப்புவித்தல், பிறகு அதையே எழுதிப் பார்த்தல் என்ற முறையில் நம் கல்வி அமைந்திருப்பதால் எவ்வளவு பெரிய விடயத்தையும் தெளிவாக மனத்தில் பதித்துக் கொள்ளும் ஆற்றலை நம் நாட்டு மாணவர்கள் பெறுகின்றனர். உலகில் எங்கு வாழ்ந்தாலும் அந்த நாட்டு மொழியைத் தெளிவாகக் கற்று அந்த நாட்டு ப் பண்பாட்டுடன்  ஒன்றிவிட முடிகிறது  நம் இளைஞர்களால் . காரணம் மனத்தில் பதித்துக் கொள்ளும் ஆற்றலே!
ஏழை மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்று அவர்களுக்கு மதிய உணவைப் பள்ளியில்  அரசே வழங்கும் முறையைக் கொண்டு வந்தது நம் நாட்டில்தான். உலகில் உள்ள அனைத்து முன்ணணி நிறுவனங்களும் தமக்குத் தேவையான திறமையான  விஞ்ஞானிகள்,மருத்துவர்கள், தொழில் நுட்ப வல்லுநர் என்று தேடித் தேடி அவர்கள் பயிலும் கல்லூரியிலேயே வந்து அவர்களைக்  கம்பளம் விரித்து அழைத்துப் போவது நமது நாட்டு மாணவர்களைத்தான். இது நமது கல்வி முறைக்கு உலக நாடுகள் தரும் அங்கீகாரம் அன்றி வேறென்ன?கல்வியுடன் சேர்ந்த கண்டிப்பு  ஆசிரியர்கள் காண்பிப்பதால் நம் நாட்டு மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியறிவு பெறுகின்றனர்.இது போன்ற கல்வி போதிக்கும் நிலையை மேலை நாடுகளில் காணமுடியாது. ஆசிரியர் மீது  மதிப்பு, மரியாதை, பயம் என சரிவிகிதத்தில் கலந்து கல்வி புகட்டுவதால் மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி பயில நம் நாட்டுக் கல்விமுறை வழி வகுக்கிறது.

ஒரு சமூகம் சிறந்த நிலை அடைந்தால் அதற்குப் பின்னால் கண்டிப்பாக அருமையான ஆசிரியர்கள் இருப்பதை அறியலாம் . அர்ஜுனனுக்கு துரோணாச்சாரியார் போலவும், திருடனாக திரிந்த வால்மீகிக்கு  நாரதர் போலவும் விவேகானந்தருக்கு ராமகிருஷ்ண பரமஅம்சரைப் போலவும் ஒவ்வொரு மாணவனுக்கும்  ஆசிரியர் ஒருவர் இருக்க வேண்டும். இதனால்தான் நம் நாட்டில் மாதா, பிதா, குரு , தெய்வம் என்று தெய்வத்துக்கும் மேலாக குருவை வைத்துள்ளனர். தற்போது ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தினம் செப்டம்பர் மாதம் 5 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

நம் முன்னோர் அமைத்துக்கொடுத்த  பாதையில் செல்வதால் நமது கல்விமுறையானது உலகில் 3 -ஆவது இடத்தில் உள்ளது. சிறப்பு பெற்று விளங்கும் நமது கல்வித்துறை அண்மைக் காலமாகப்  புற்றீசல் போலப் பெருகிவரும் தரமற்ற சில தனியார் கல்வி நிறுவனங்களாலும் ஒழுங்கீனமான சில ஆசிரியர்களாலும்   பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.இதை கருத்தில் கொண்டு அரசாங்கம்  கடுமையான சட்ட திட்டங்கள் தீட்டி செயல் படுத்தினால்  இளைய சமுதாயத்தின் கல்வி நிலை மேம்படும். காரணம்  இன்னும் 10 ஆண்டுகளில் உலகில் உள்ள இளைஞர்களில் 50% இளைஞர்கள் இந்தியாவில் இருப்பர் எனப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட இளைஞர் சமுதாயத்தை நேரான பாதையில் நடத்தி ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த நமது பாரம்பரிய இந்தியக் கல்வி முறையால் மட்டுமே முடியும்.

அப்துல் தயுப்



ஒரு நாடு பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி பெற்று முன்னேறவும்ஆரோக்கியமான ஒரு சமூகம் சிறந்த முறையில் உருவாகவும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று தரமான கல்வி. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வியின் இன்றைய நிலை  நம் நாட்டில்,குறிப்பாகத் தமிழ் நாட்டில் எப்படி இருக்கின்றது என்று  சிறிது ஆராய்ந்ததின் விளைவே இந்தக் கட்டுரை.

தம் பிள்ளை தொட்டிலில் இருந்து இறங்கிய உடனேயே ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்ற  வேட்கையில் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் இந்த மனப்போக்கைத் தனியார் கல்வி நிறுவனங்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.குழந்தை பிறக்கும் நாளை மருத்துவர் குறித்துக் கொடுக்கும் நாளில் இருந்தே நர்சரி பள்ளியில் இடம் தேட ஆரம்பித்து விடுகின்றனர்.முதல் நிலைக்கே ஆயிரக்கணக்கில் கட்டணம் அது மட்டுமல்ல பெற்றோர் ஏதேனும் பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். நுழைவுத் தேர்வும் அவர்கள் எழுத வேண்டி உள்ளது. என்று நம் கல்வித்துறையில் தனியார் நுழைந்தார்களோ அப்போது  ஆரம்பித்தது தான் நமது கல்வித்தரத்தின் வீழ்ச்சி. சில தனியார் கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்களே இதற்குச் சாட்சி.   வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த பெண்களை எல்லாம் 500, 600,ருபாய்க்கு நர்சரி பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்கு அமர்த்தி விடுவதிலேயே வீழ்ச்சி  துவங்கி விடுகிறது. பொறியியல் கல்லூரிகளில் அரசாங்கம் நிர்ணயித்த கல்வித் தகுதிகொண்ட பேராசிரியர்களை நியமித்தால் அவர்களுக்கு அரசாங்கம் நிர்ணயம் செய்த ஊதியம் வழங்கவேண்டி வரும் என்பதற்காகத் தங்கள் கல்லூரியில் படித்து முடித்த மாணவ மாணவிகளை மிகமிகக் குறைந்த சம்பளம் கொடுத்து ஆசிரியர்களாகப் பணியில் அமர்த்தி விடுகின்றனர். தங்கள் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்தால் தாங்களே வேலை வாய்ப்பும் பெற்றுத் தருவதாகவும்  சிறிதும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் விளம்பரம் மூலம் சுய தம்பட்டம் அடித்து கொள்கின்றன இந்தக் கல்விநிறுவனங்கள். இவர்களால் பிள்ளைகளுக்கு எப்படித் தரமான கல்வியைத் தர முடியும்? இப்படி இவர்களைக் குறைந்த சம்பளத்தில் நியமித்து விட்டுக் கல்விக் கட்டணத்தை மட்டும் அதிக அளவில் வசூலிக்கின்றனர்.மாதக் கட்டணம் மட்டும் இல்லாமல் தேர்வுக் கட்டணம் தனி. ஒவ்வொரு  வருடமும் பள்ளிச் சீருடை,நோட்டு, புத்தகமும் அவர்களிடம் தான் வாங்க வேண்டும். சீருடை நல்ல நிலையில் இருந்தாலும் இது கட்டாயம். பள்ளியில் நல்ல குடிநீர் கிடைத்தாலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தருகிறோம் என்ற வகையில் அதற்குத் தனியாகப் பணம் வசூலிக்கின்றனர். இதனால் நடுத்தர மக்களும் அதற்குப் கீழ் வருமானம் உள்ளவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

முன்பு எல்லாம் பள்ளி ஆண்டு விழாவில் கண்டிப்பாகத் தேசத்தலைவர்கள்  வேடமிடுதல்,தேசபக்திப் பாடல்கள் பாடுவது என்று இடம் பெறும். ஆனால் தற்போது  ஆண்டு விழா என்றாலே சினிமா பாடல்கள் மட்டுமே என்று ஆகி விட்டது.இந்த நிலையில் பிள்ளைகளின் மனத்தில் தேசிய உணர்வோதேசத்தலைவர்களைப் பற்றிய செய்திகளோ எப்படிப் பதியும்?போகிற போக்கில் படிப்பதோடு சரி.சில பொறியியல் கல்லூரிகளிலும் சினிமா சம்பந்தப்பட்டவர்களை தலைமை தாங்க அழைப்பதால்  இளைய தலைமுறையினரிடம் சினிமா பற்றிய சிந்தனை மேலோங்கி நிற்கிறது. இப்படிக் கொட்டமடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை ஒடுக்கத்தான் சமச்சீர்க் கல்வி முறையும் வரையறுக்கப்பட்ட கல்விக் கட்டணமும் கொண்டு வரப்பட்டன.ஆனால் அதை ஏற்க அவர்கள் தயாராக இல்லை.ஏன் என்றால் அரசாங்கப் பள்ளியை விடத் தங்கள் கல்வித் தரம் உயர்ந்தது என்கிற மாயையை மக்கள் மனத்தில் பதித்து இருந்தனர்.அது இனி இல்லாமல் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே கல்வி முறை வந்து விட்டால் மக்கள் இனி ஏமாறமாட்டார்கள் என்றே பயந்து இந்தத் திட்டங்களை ஏற்க மறுத்து நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தே காலம் கடத்துகிறார்கள்

கண்பார்வை அற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக  நடத்தப்படும் கல்வி முறையிலும் சில மாற்றங்கள் வேண்டும்,அதாவது அவர்களின் பாடங்கள் Braille முறையிலும்,சாதாரண முறையிலும் இருந்தால்  பாடங்களைக் கற்றுத் தருவதில் அவர்களின் தாயாலும் உதவமுடியும்.கொரியா நாட்டில் இந்த முறை உள்ளது.

அரசும் இன்னும் தன் பள்ளி நிர்வாகத்தையும் பள்ளிப் பாது காப்பையும்  மேம்படுத்த வேண்டும்.இனி ஒரு கும்பகோணக் கோர விபத்தோ,பள்ளி வாகன விபத்தோ ஏற்படாமல் காக்க வேண்டும். எந்த நிலையிலும் தனியார் பள்ளிகளுக்குக் குறைந்தது இல்லை அரசு பள்ளிகள் என்ற நிலை கொண்டு வர வேண்டும். முறைகேடான ஆசிரியர்களைக்  கண்டறிந்து அவர்களை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வோர் அரசாங்க ஊழியரும்,அரசியல் வாதிகளும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்கவேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். சிறந்த திறமையும்அறிவும் நிறைந்தவர்கள் நம் நாட்டு மாணவர்கள்.நம் வருங்காலச் சமுதாயத்தை மாற்றி அமைக்கும் திறன் கொண்டவர்கள்.   அதிகபடியான கட்டணங்களை அவர்கள் மீது சுமத்தி அவர்களை நசுக்கி விடாதீர்கள். 

திருமதி  அப்துல் தயுப்.

lundi 29 octobre 2012

எண்ணப் பரிமாற்றம்

                                   Mountain Path HD wallpaper for Standard 4:3 5:4 Fullscreen UXGA XGA SVGA QSXGA SXGA ; Wide 16:10 5:3 Widescreen WHXGA WQXGA WUXGA WXGA WGA ; HD 16:9 High Definition WQHD QWXGA 1080p 900p 720p QHD nHD ; Other 3:2 DVGA HVGA HQVGA devices ( Apple PowerBook G4 iPhone 4 3G 3GS iPod Touch ) ; Mobile VGA WVGA iPhone iPad PSP Phone - VGA QVGA Smartphone ( PocketPC GPS iPod Zune BlackBerry HTC Samsung LG Nokia Eten Asus ) WVGA WQVGA Smartphone ( HTC Samsung Sony Ericsson LG Vertu MIO ) HVGA Smartphone ( Apple iPhone iPod BlackBerry HTC Samsung Nokia ) Sony PSP Zune HD Zen ; Tablet 2 Android ; Dual 4:3 5:4 16:10 5:3 16:9 UXGA XGA SVGA QSXGA SXGA WHXGA WQXGA WUXGA WXGA WGA WQHD QWXGA 1080p 900p 720p QHD nHD ;

அன்புடையீர்,

வணக்கம். 'இறைவன்', அவன்பாற்படும் ஈர்ப்பு, அதனால் விளையும் அனுபவங்கள், அந்த அடிப்படையில் உண்டாகும் நம்பிக்கை இவற்றை எந்த மொழியிலும், எந்த விளக்கத்தாலும் அளிப்பதற்கில்லை ! அதனால்தான் இன்று வரை அவன் புரியாத புதிராகவே இருக்கிறான்.

விஞ்ஞானம், கடவுளைப் படைத்தவன் மனிதன், அவனது உள்ளார்ந்தத் தனிமையைப் போக்கிக்கொள்ள, பயத்திற்குத் துணை நிற்க அவனே உருவாகிக் கொண்டது என்கிறது. அதனால்தான், தன்  அச்சத்திற்குக் காரணமான பஞ்ச பூதங்கள் முதற்கொண்டு வணங்க ஆரம்பித்தான் என்று  சான்றும் அளிக்கிறது. எனினும் பிரபஞ்சத்தைப் பூரணமாக அறியும் ஆவலின்  ஆழமான ஆராய்ச்சிகளின்  முடிவில், ஓர் ஒழுங்குபட்டக் கட்டுப்பாடு, சக்திகளின் சமனப்படுத்தப்பட்ட செயல்பாடு இவற்றுக்கு அடிப்படை எது, அது ஏன் வேறு முறையில் இல்லை என்பதற்கான பதில் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆராயாமலே ஒரு மனிதன் ஏற்றுக்கொண்டுள்ள  'ஒரு மாபெரும் சக்தி'யின் முழு இயக்கம் என்ற முடிவையே அவர்களும் முன் வைக்க வேண்டியுள்ளது.

ஆன்மிக உணர்வாளர்களுக்கோ எந்தக் கவலையும் இல்லை. அவர்களுக்கு "இறைவன்" இருக்கிறான் ! இன்பத்திலும்,துன்பத்திலும் கை கொடுக்க, ஆறுதல் அளிக்க, வழி காட்ட, தானே வழி நடத்திச் செல்ல என்று ஒவ்வொரு நிலையிலும் அவர்கள் அவனை உணர்கிறார்கள். அவர்களது ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைக்கிறது. வேறு எந்தப் புறச் சலனமும் அவர்களைப் பாதிப்பதில்லை !

இந்த ஆத்மார்த்தமான அனுபவங்களைப் புறக்கணிப்பதற்கில்லை. விஞ்ஞானம் கூறுவது போல இது மூளையின் செயல்பாடாகவே இருந்தாலும், அவர்களே மூளையின் ஒரு பகுதியைத்தான் நாம் உபயோகிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்றும் சொல்கிறார்களே ! அதனால் ஆன்மிகவாதிகள் சராசரி மனிதர்களைப் போலன்றி சற்றே அதிகமாக 'அறிவின் வழி பெற்ற ஞானம்' மூலம் இந்த அனுபவங்களைப் பெறுகிறார்கள் என்று கொள்ள வாய்ப்பிருக்கிறதே !

போட்டியிட்டுத்  தன்  நிலையை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்  இந்தக் காலக் கட்டத்தில், எப்படி எல்லோரும் வெற்றியின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு விளக்கம் தேவை இல்லை. 'கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெற, வியர்த்தமான எத்தனை கடும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன என்பதை அறியும்போது மனிதனின் புகழ் ஆசை அவனை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். (வருங்காலத்தில்  'புகழ்' வெளிச்சத்தில் ஒருவன் 15 நிமிடங்களே இருக்க முடியுமாம். ஏனெனில் அதற்குள் இன்னொருவன் அவன் இடத்திற்கு வந்து விடுவானாம்!) ஆனால் அந்த நிலையை அடைந்தபின், முழு திருப்தியை அவன் அடைந்து விட்டானா என்பதுதான் முக்கியம். தானே தன்  சாதனையை முறியடிக்க முயல்வதும், அல்லது வேறு வகைகளில் மீண்டும் ஈடுபடுவதும் அவனது நிறைவற்ற நிலையையேக் காட்டுகிறது ! ஆனால் இதையே ஒரு வேதாந்தி , "நீ பெறும் இன்பம் நிலையற்றது" என்று கூறினால் அது வேலையற்ற ஒருவனின் வீண்  பிதற்றல் என்கிறோம். உன்மத்த நிலையில் மட்டுமே இப்படிச் சிந்திக்க முடியும் என்பது உண்மையானால், உலகின் போக்கைச் சிறிதேனும் மாற்றும் சக்தி படைத்த அறவுரைகளையும், ஞானத்தையும் அளித்த ஞானிகள் அனைவருமே  உன்மத்தர்கள் தானா!?

தனிப்பட்ட ஒருவன் தன் அனுபவத்தால் கூறும் இதே உண்மையைத்தான் மதங்கள் தங்கள் செயல்பாடுகளால் புரியவைக்க முயல்கின்றன.ஒரு சில நிலைகளில், அங்கே இருந்து உழைப்பதும் பலவீனம் கொண்ட மனிதர்கள்தாம் என்பதால், ஒரு சில தவறுகளோ அல்லது தவறான முன்னுதாரணங்களோ காணக் கிடைக்கலாம். எனினும் பெரும்பாலோரின் ஆன்ம ஈடேற்றத்திற்கு அவை வழிகோலுகின்றன என்பதில் ஐயமில்லை ! "இறைவன் அல்லது மூலக் காரணமான - ஆதியும், அந்தமுமான மகத்தானச் சக்தியின் கூறு" ஆகிய "நீ", "உன்னை" உணர்வதை விடுத்து, உன் சக்தியைப்  பயனில்லாதச்  செயல்களில் விரயம் செய்யாதே என்று சொல்லி, மக்களின் அறியாமையைப் போக்க அவை உழைக்கின்றன.ஆனால் இவ்வுலக வாழ்வுக்கு "அறியாமை" மிகவும் அவசியம், குழந்தையின் பேதைமை போல. பேதைமை இருக்கும் வரைதான் அது குழந்தை. அந்தத்  தூய நிலை திரிந்த பின் எல்லாக் கசடுகளும் மனதை ஆட்கொள்கின்றன.  அறியாமை இருக்கும் வரைதான் மனிதன். சுயநலத்தோடு, 'தான், தன் குடும்பம்' என்ற கூட்டுக்குள் இருப்பான். அது நீங்கியபின் கொட்டைக்குள் ஒட்டாத விதையாகத் தனித்துப் போவான் !

"ஆன்மிகம்" பற்றி அறியாதோர் இல்லை. அதிகம் தெரிந்த ஒன்றைத் தான் அதிகம் பின்பற்ற மாட்டோம்; எல்லாமாக விளங்கும் தாயைப் போற்றாதிருப்பது போல ! எனவேதான் இது பற்றி சற்றே சிந்திப்போம் என்று தோன்றியது.

இந்தியா ஒரு ஆன்மிகக் கடல். தெய்வீகச்  சிந்தனையை அது எப்படியெல்லாம் ஊட்டுகிறது என்பதை அடுத்துப்  பார்ப்போம்.

திருமதி சிமோன் 

கடலில் கலக்கும் நதிகள்

                                                       

இன்றைய உலகின் அமைதியைக் காப்பதில் மதங்களுக்குப்  பெரும் பங்கு உள்ளது. மதத்தலைவர்கள் இதை உணர்ந்து, தங்கள் பின்பற்றாளர்களை பரந்த மனதுடன் செயல்பட வைத்தார்களானால்  உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும். ஆனால் விசுவாசிகளை மறு பக்கம் திரும்பவிடாமல் காக்கவும்,மதத்தைப் பரப்பவும்,ஊடாடி இருக்கும் குறைகளைப் போக்கவுமே அவர்களுக்கு நேரம் போதவில்லை ! எனவே ஒவ்வொருவரும் தாங்களே சிந்தித்து, அலசி, எல்லா மதங்களின் குறிக்கோளும் ஒன்றுதான்; எல்லாம் பிரபஞ்சத்தை இயக்கும் மகா சக்தி ஒன்றைப் புரிய வைக்கவே முயலுகின்றன, எல்லோரும் "அன்பே கடவுள்" என்பதையே உணர்த்த விரும்புகிறார்கள் என்ற அடிப்படையை அறிந்து விட்டால், 'பேதம்' என்பதே இல்லாதொழியும் !

பஹாய்  நம்பிக்கை: ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் தோன்றி, மிக விரைவாக வளரும் ஓர் மதம். பஹா உல்லாஹ் என்ற பார்சிக்காரர் தோற்றுவித்தது.5மில்லியன்மக்கள்பின்பற்றுகின்றனர்.ஆபிரகாம்,கிருஷ்ணர்,மோசேஸ்,zoroaster,புத்தர்,கிறிஸ்து, முகமது என எல்லோர் கொள்கைகளையும் உள்ளடக்கியது. "ஒரே கடவுள், எல்லோரும் ஒன்றே" என்பதே இதன் சாரம்.

புத்தம் : இந்தியாவில் கி.மு.566-486 இல் புத்தரின் போதனையைப் பின்பற்றி தோன்றி, பரவியது. உலகைத் தோற்றுவித்த 'கடவுள்' பற்றிப் பேசுவதில்லை. இருக்கும் உலகில் 'வாழும் வகை' பற்றிக் கூறுகிறது. புத்தரையும் வழிபடாது வணக்கம் செலுத்துகின்றனர். "கெட்டதை விலக்கி, மனப்பயிற்சி மூலம் நல்வாழ்வு வாழ்ந்து, நிர்வாணமடைவது (ஞானமடைவது)" குறிக்கோள்.

கிறிஸ்துவம் :  இயேசுவின் வாழ்வு, அவரது போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. முதல் நூற்றாண்டில் யூத மதப் பிரிவாக ஆரம்பிக்கப்பட்டதால், அம்மத நூலை 'பழைய ஏற்பாடு' ஆகக் கொண்டுள்ளது. 2.1 பில்லியன் விசுவாசிகளை உள்ளடக்கியது. 33,830 உட்கிளைகளைக் கொண்டுள்ளபோதும்  கத்தோலிக்கமே உலகின் பெரிய மதமாக விளங்குகிறது. "கடவுளை அன்பு செய்; உன்னைப்போல் பிறரை நேசி" என்பதே இயேசுவின் அறிவுரை.

சைன மதக் கொள்கை:Shenism-Chinese folk என்று அழைக்கப்படும் 454 மில்லியன் கடைப்பிடிப்போரைக் கொண்டது. பாங்கு (Pangu) என்னும் படைக்கும் கடவுள் அல்லாது, அறிவு, செல்வம் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அனைத்திற்கும் பெண் தெய்வங்கள் உட்பட பலர்  உண்டு. அவர்களை வணங்குவது மூலம், அந்த நலன்களைப் பெற்று உய்வதே பிறவிப் பயன் என்கிறது.

இந்து மதம்: 850 மில்லியன் பக்தர்களை உடைய உலகின் 3ஆவது பெரிய சமயம். இதைத் தோற்றுவித்தவர்களோ அன்றி நெறிப்படுத்தும் மைய அமைப்போ இல்லாதது.கி.மு. 1500 முதற்கொண்டே இருக்கும் வேத கால சமயம். பல்வகை நம்பிக்கைகளும், சடங்குகளும், சமய நூல்களும் உடையது. அன்பு, நம்பிக்கை,உறுதி கொண்ட எல்லா மதங்களும் ஒரே நிலைக்கு இட்டுச் செல்லும் என்ற எண்ணத்தால், பிற மத சகிப்புத்தன்மை கொண்டது. தனி மனித விருப்பு,வெறுப்பு கடந்து தூய உணர்வு பூர்வ அறிவியல் கொண்ட ஆன்மிக கொள்கையை 'சனாதன தர்மம்' அல்லது 'நிலையான தத்துவ ஞானம்' எனக் கொண்டு, "அறம், பொருள்,இன்பம்,வீடு" என்ற இலக்கை நோக்கி மனித குலத்தை வழி நடத்துகிறது.

இஸ்லாம்: 7ஆம் நூற்றாண்டில் சவூதி அரேபியாவில் தோன்றிய, கிறிஸ்துவத்திற்கு அடுத்து 180 கோடி மக்களால் பின்பற்றப்படும் மதம். யூதம்,கிறிஸ்துவம் போலவே அபிரகாம் வழி வந்த இதிலும் பல பிரிவுகள் உண்டு. திருக்குர்ஆன் கூறுவதுபோல வாழ்வில் நடந்துகொள்வதும், "கடவுளை ஏற்று, சரணடைய வேண்டும்" என்பதும் கொள்கையாகக் கொண்டுள்ள இவர்கள், எல்லாம் இறைவனால் படைக்கப்பட்டவை என்னும் கருத்துடையவர்கள். இறைதூதர்களில் இறுதியானவரான முகம்மது நபிகளுக்கு இறைவனால் சொல்லப்பட்ட வார்த்தைகளே குரான் ஆகும்.

ஜைனம் : கிறிஸ்துவுக்கு  3000-3500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. இந்து கொள்கைகளான கடமை, நற்செயல் புரிதல், ஆன்மிக வழி நடத்தல் போன்றவைகளும், புத்த மதத்து அஹிம்சை போதனையும் கொண்டது. 24 தீர்த்தங்கரர்களால் வழி நடத்தப்படுகிறது. 12 மில்லியன் பின்பற்றாளர்களை உடைய இவ்வமைப்பின் 24வது கடைசி தீர்த்தங்கரர் 'மகாவீரர்'. இவர்களைப் பொருத்தமட்டில் பிரபஞ்சம் நிலையானது, அதற்கு அழிவில்லை. இந்தியாவில் சமணம் என்று சொல்லப்படும் இந்நெறி பற்றி சங்ககாலப் பாடல் உண்டு. இன்றும் சமண அறநெறிச் சிந்தனை தமிழக மக்களிடம் உண்டு.

எல்லா மதங்களிலும் தவறாமல், "உனக்குத் துன்பம் தருவதைப் பிறருக்குச் செய்யாதே, உனக்கு இன்பம் தருவதை மற்றவர்க்கும்  செய்" என்ற அறிவுரை கூறப்பட்டுள்ளது. இந்த ஒன்றை மட்டும் அனைவரும் பின்பற்றிவிட்டால், சொர்க்கம் இங்கேயே வந்துவிடும் !

திருமதி சிமோன்





அன்றைய நம்பிக்கைகள்

                                               
எகிப்து நாகரிகம் தொட்டு ஒரு, பல கடவுளர் நம்பிக்கை இருந்து வந்துள்ளது. பொதுவாகப்  பிரபஞ்சத்தைப் படைத்து, காப்பவர் ஒருவர் உள்ளார்  என்பதுதான் அடிப்படை. இதில் சுவையான அனுபவம் அல்லது கற்பனைகள் கதைகளாக பின்னர் சேர்ந்திருக்கலாம். வானுலக இறைவன் ஒளிமயமானவர், கருணை வடிவானவர் என்பதில் எதிலும் வேறுபாடில்லை ! அவரைப் பற்றிய அறிவும், ஞானமும் உடையவர்கள் 'குருக்கள்' ஆகவும், அவர் அருளால்  வரும் பொருள் உரைப்பவர்கள் 'தீர்க்கதரிசிகள்' ஆகவும் ஏற்கப்பட்டனர்.

இயற்கை எப்படி வளர்ச்சி, அழிவு, பின் மீண்டும் பிறப்பு எனச்  சுழல்கிறதோ அது போலவே பிறப்பு, வளர்ச்சி, இறப்பு, மீண்டும் பிறப்பு என்ற சுழற்சியும் இயற்கையானது என்ற எண்ணமும், நம்பிக்கையும் சில மதங்களின் தளமாக உள்ளன . எல்லாவற்றையும் அலசுவது என்பது  இயலாத ஒன்று. ஒரு சில :

   
                                                       

அஞ்ஞானித்  தத்துவம் : (Paganism) இந்த இறை நம்பிக்கைக்கு ஏன் இப்படிப்  பெயர் சூட்டினார்கள் என்று தெரியவில்லை ! (ஒரு வேளை 'தங்களை ஞானிகளாகக் கருதி' தங்களுக்கு முற்பட்டவர்களது நம்பிக்கையை விமர்சிக்கும் வகையில் இருக்கலாம்) அப்ரகாம் வழி வந்த கிறித்தவம், இஸ்லாம், யூதம் சாராத தொன்மையான ஐரோப்பிய நம்பிக்கை.கிறித்தவத்திற்கு முன் ஐரோப்பாவில் செல்வாக்குப் பெற்றிருந்தது.


                                                        

அனைத்து இறைக் கொள்கை:(Pantheism) கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. 'Pan' - அனைத்து, 'theos' - கடவுள். இயற்கை உட்பட பிரபஞ்சமும், கடவுளும் சமம் என்னும் கருத்துடையது. உள்ளவை எல்லாம் கடவுளால் வந்தது மட்டுமல்ல, கடவுளில் கலந்தது என்னும் கருத்து. வலம்புரிச் சங்கும், விண்மீன் திறள்களுமான குறியீடு கொண்டது. உயிர்களும், விண்கோள்களும் இணைந்த நிலை இப்படிக் காட்டப்படுகிறது. சங்கு, விண்மீனின் புரிகள் பரிணாமம், ஆன்மிகம், வளர்ச்சி முதலியவற்றைக் குறிப்பிடுகின்றன.

இதில் 'கடவுளை ஏற்கும்'-'கடவுளை மறுக்கும்' என இரண்டு வகை உண்டு.
 1. கடவுள் காலம் கடந்தவர். அனைத்தையும் உண்டாக்குபவர். உலகு, காலம் இவை அவரின் வெளித்தோற்றம் அல்லது உருமாற்றம். அதாவது கடவுள் நிலையாக நின்று இயற்கையை அவரின் பகுதியாகச் செயல்படுத்துவது.
2.இயற்கையின் ஒரு பகுதியே கடவுள். அல்லது கடவுளும் இயற்கையின் கூறே !

இந்து மதக் கொள்கை இன்னதுதான் என்று வரையறுப்பது எளிதில்லை என்றாலும், இந்த அடிப்படையைக் கொண்ட புராதன சமயமாக அது உள்ளது. பிரம்மம் ஒன்றே 'உள்ள' பொருள். அதன் கூறுகள் பிரபஞ்சம், உயிர் என வெளிப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் வேத நூலிலும், உபநிடதங்களிலும் உள்ளன. 'தத்துவமசி', 'அகம் பிரம்மாஸ்மி' போன்ற வார்த்தைகள் இந்து சமய அனைத்து இறைக் கொள்கைக்கு அடித்தளம்.
'ஆளுறவு  கடவுள் கொள்கை' யும் இந்து மதத்தில் உள்ளதால் பக்தி, வணக்கம் போன்றவை இருந்தாலும், கடவுளும், ஆன்மாவும், பிரபஞ்சமும் பரபிரம்மத்தின் வெளிப்பாடே என்னும் கருத்தும் உள்ளதால், அனைத்து இறைக் கொள்கையின் ஆழ்ந்த அடிப்படையும் இதில் அடங்கியுள்ளது.

                                                             

ஒலிம்பியக் கடவுளர் : கிரேக்க ஒலிம்பஸ் மலை உச்சியில் வாழ்ந்த 12 கடவுளர். மொத்தம் 17 கடவுள்கள் இப்படிச் சொல்லப்பட்டாலும், ஒரே நேரத்தில் 12 பேர் மட்டுமே குறிக்கப்பட்டனர். இந்தியக் கடவுள்கள் போல் கடவுளுக்கு உடன் பிறப்புகள், மனைவி மூலம் பிறந்தவர்கள் என்று உறவுமுறையாளர்கள் உண்டு.

திருமதி சிமோன் 

தவறிய சமயப் பாதைகள்


                                                         

என்று உலகில் நல்லவை தோன்றியனவோ, அன்றே தீமைகளும் தோன்றிவிட்டன போலும்! மனிதனின் சபலங்களும், தான் என்னும் மமதையும், தவறான முடிவுகளும் எங்கே சென்று முடியும் என்பதை  சாமானியனுக்கு உணர்த்த  வேண்டும் என்பதற்காகவே இவற்றுக்கும் இடமளித்துவிட்டான் இறைவன். அப்படிச்  சில பாதை தவறிய  வழிகாட்டிகள் :

                                                             

மக்கள் கோயில்: 1955இல் ஜிம் ஜோன்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். கம்யுனிச தத்துவத்தை, மார்க்சியத்தை கிறித்தவ ஆலயங்களில் புகுத்தினார். முறைகேடுகள் நடப்பதாக அறிந்து அமெரிக்க காங்கிரெஸ் உறுப்பினர் லியோ ராயன் 17/11/1978 இல் அங்கே சென்றார். விசாரணைக்குப்பின் சில உறுப்பினர்களுடன் அவர் வெளியேறியபோது, கோயில் பாதுகாப்பினரால் சுடப்பட்டு, 3 ஊடகவியலார் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர். அன்றிரவு சயனைடு பானம் அருந்தச் சொன்ன ஜிம் உள்ளிட்ட 918 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் 270 குழந்தைகள்!  ஒரே நாளில் இயற்கை அழிவாலல்லாமல், போர் என்றில்லாமல்  இத்தனைப் பேர் தற்கொலையால் இறந்தது இதுவே ஆகும் !

                                                               

நித்தியானந்தர் : பரமகம்சர் பட்டம் பெற்ற நித்தியானந்தர் 34 வயதேயான இளைஞர். 12 வயதில் 'உடல் தாண்டிய அனுபவம்' பெற்று  . 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி இமயமலையில் தவம் செய்து, 1/1/2000 முதல் 'ஞான அநுபூதி' எனும் அடைமொழி அடைந்து, 'தியான பீடம்' என்னும் சேவை நிறுவனம் ஆரம்பித்தவர். இதற்கு 800 கிளைகள் 21 நாடுகளில் உள்ளன.

2010இல் நடிகை ஒருத்தியுடன் அவர் நெருக்கமாக இருந்த நிலை ஒளி பரப்பப் பட்ட பிறகு தலை மறைவானார். ஒரு மாதத்திற்குப் பிறகு கைதானபோது, 3 லட்ச ரூபாயும், 2000 டாலர் பயண காசோலையும் அவரிடம் இருந்தன. கர்னாடக ராம நகர மாவட்ட 'பிடதியில்' வன்முறையில் ஈடுபட்டு, பத்திரிக்கையாளர்களைத் தாக்கினார். 2 வழக்குகள் போடப்பட்டு, ஆசிரமமும் மூடப்பட்டது. இதற்குப் பின்னும் 292ஆவது மதுரை ஆதீனம் தனது வாரிசாக இவரை நியமிக்க, தற்போது மீண்டும் தலைமறைவாக உள்ளார். மதுரை மடமும் மூடப்பட்டுள்ளது. பக்தர்களை நம்பிக்கை மோசடி செய்ததாக பல ஊடகச் செய்திகள் உலா வருகின்றன.

                                                     

ஜெயேந்திரர்: ஆதி சங்கரரின் சமாதி மீது நிறுவப்பட்டுள்ள, தென்னிந்தியாவின் முதன்மை இந்து அமைப்பான காஞ்சி காமகோடி பீடத்தின் 69ஆவது சங்கராச்சாரியாராக இருந்தவர். இம்மடம் பல பள்ளிகள்,    மருத்துவமனைகள் முதலியவற்றை இயக்குகிறது.1986இல் சங்கர மடத்தை விட்டு காணாமல் போய், ஒரு மாதத்திற்குப்பின் அழைத்து வரப்பட்டவர் இவர்.

இவரது சகோதரர் விசயேந்திர சரசுவதிகளும், இவரும் 2004இல் காஞ்சி  கோவில்    மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
2011இல் தமிழ் நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளார்.

கடவுளின் பெயரால், அவர் சார்பில் மக்களை வழி நடத்துகிறோம் என்ற போர்வையில்  இன்னும் எத்தனையோ சந்தர்ப்பவாதிகள் தங்கள் சொந்த நலனுக்கு மக்களைப் பலியிடுகின்றனர். இறைவன் எங்கும் இருப்பதும், அவன் எல்லோருக்கும் அருள் வழங்கத் தயங்காதவன் என்பதும் உணரப்பட்டால், இந்த இடைத் தரகர்களின் கை ஓங்க வழியே இல்லை !

இவர்களை இன்னும் மத போதகராக மதிப்போர் இருக்கக் கூடும். சிந்தித்து முடிவெடுப்போர், தனி மனித சறுக்கல் என்று மன்னிக்கக் கூடும். இத்தகு நிலையைத் தவிர்த்திருக்கலாமே என்று ஆதங்கப் படுவோரும் இருக்கலாம். பலரும் வணங்கும் வகையில், உயர் பீடத்தில், மதப் பிரதிநிதிகளாக வலம்  வரும்  இவர்கள், நீதி மன்றம், தண்டனை என்பதற்குப் பதில், கடவுள் பக்தர்களாக, மனசாட்சியை மதிப்பவர்களாக இருப்பின், தாங்களே குற்றத்தை உணர்ந்து மன்னிப்புக் கேட்பதே, இவர்களும் வணங்கும் அந்த இறைவனுக்கு ஏற்பு !

திருமதி சிமோன்


மதநல்லிணக்கம்



                                                         


நெறி கெட்டுத் தறி கெட்டுச் சென்று கொண்டிருந்த மனிதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட நெறிதான் மதம்.இரை தேடலும் இறை தேடலும் மனிதனின் அன்றாடத் தேவைகளாகும் ஒன்று உடலுக்கு ; பிந்தியது உள்ளத்துக்கு.எல்லா மதங்களிலும் மனித சமுதாயத்துக்கு நன்மை தரும் கருத்துகள் உள்ளன.அவற்றைப் பின்பற்ற வேண்டுமே தவிர என் மதம்தான் சிறந்தது,  அதை மட்டுமே ஆதரிப்பேன் மற்ற மதங்களை வெறுப்பேன் என்று சொல்ல கூடாது.ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் சுதந்திரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வரைதான் அமைதியும் மானிடத்துவமும் காக்கப்பெறும்.
நதிகள் பலவாறாகத் தோன்றினாலும் கடைசியில் கடலை அடைகிறது. அதே போல் நாம் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் இறைவன் ஒருவனேயே அடைகிறோம் என்கிறார் விவேகானந்தர்.கரைகள் நதியை வழிப்படுத்த. மதங்கள் மனிதனை நெறிபடுத்த! வெறிபடுத்த அல்ல.
அண்மைக்காலத்தில் உலகெங்கும் பரவலாக மதத்தின் அடிப்படையில் வன்முறைகளும் மனித நேயமற்ற நிகழ்வுகளும் நடைபெறுவதைக் காண்கிறோம்.மதம் என்னும் போதை அளவுக்கு அதிகமாகும் போது மனிதன் மதம் பிடித்தவனாகிறான் ; தன்னிலை இழக்கிறான் ; விலங்குகளைவிட மோசமான நிலையில் மனிதனை மனிதனே அடித்துக்(அழித்துக்)  கொல்லும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறான். "மதத்தின் பேராலும் இனத்தின் பேராலும் இரத்தம் சிந்தப்படுவதை வன்மையாக எதிர்க்கிறேன். மனித நேயமே என் மதம் " என்பது ஆல்பிரட் ஐன்ஸ்டின் கருத்து. மத நல்லிணக்கம் உருவாகாதவரை உலகிற்கு விமோசனம் இல்லை.மதச் சகிப்புத் தன்மை என்பது , பிற மதங்களின் மீது ஒருவருக்குள்ள மனவெறுப்பை நீக்குவதே. இதுவே  மத நல்லிணக்கத்தின் முதல் படியாகும்.இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு எல்லா மனிதர்களுக்கும்; உள்ளது. இதைக் கட்டாயப்படுத்தி உருவாக்க முடியாது. அது, மனித இதயங்களின் அன்பால் உருவாக்கப் படவேண்டியது.எந்தச் சமயத்தவராய் இருந்தாலும் அன்பு, ஈகை, உண்மை, சகிப்புத்தன்மை உடையவராக இருத்தல் வேண்டும்.
மகாத்மா காந்தி மிகுந்த மதநம்பிக்கை உடையவராக இருந்தாலும் மதப்பற்றுக்கும் மதச் சார்பின்மைக்கும் உள்ள வேறுபாடுகளை நன்கு உணர்ந்தவர். மதவெறிக்கு எதிராகக் கடைசிவரை போராடியவர். "பேச்சு சுதந்திரம் மதவெறியை மக்களிடையே தூவுவதாக இருக்கக்கூடாது. மதவெறி, இனவெறி, கெட்ட எண்ணம், மதங்கள்  இனங்கள் இவற்றிற்கிடையே வெறுப்பைத் தூண்டும் பத்திரிகைகளைத் தடைசெய்யும் உரிமை எனக்கிருந்தால் அதனை உடனே செய்வேன்" என்கிறார் காந்தி.
சமூகத்தின் அமைதியை உறுதிப்படுத்தும் பல்சமய பன்மதப் புரிமாற்றங்களை நிகழ்த்தலாம். உலகளாவிய பொதுத் தேவைக்குப் பல மதங்களும் ஒன்று கூடிக் கூட்டுப் பிராத்தனைகளை நடத்தலாம்.  இளைய தலை முறைக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டிய முக்கியமான உடைமை மதநல்லிணக்கம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.அரசியல், பொருளாதார இலாபம், பேர் புகழ் எதிர்பாராமல் மத நல்லிணக்கத்தை மட்டுமே மக்களிடம் எடுத்துச் செல்லும் செயல்கள் வரவேற்கத் தக்கவை.இங்ஙனம் பல வழிகளில் செயல்பட்டு மதசார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்.

லூசியா லெபோ.