பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 14 octobre 2011

இந்தியாவில் ஆட்சி செய்த மன்னர்கள் - ஒரு கண்ணோட்டம்


சிந்து சமவெளிப் பகுதிகளில், அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட நகரங்களின் அடையாளங்கள், இந்தியாவின் தொன்மையையும்(கி.மு.6000  -கி.மு.1900  ) நாகரிகத்தையும் உலகுக்குப் பறை சாற்றுகின்றன. வெண்கலம் மற்றும் இரும்பு ஆகிய உலோகங்கள் உபயோகத்தில் வந்தன. வேதங்கள் இயற்றப்பட்டன. பின்னர் கங்கைக் கரைச் சமவெளிகளில் சிறுசிறு அரசுகள் உருவாயின.

              மகத வம்சத்தில் தோன்றிய சித்தார்த்தர், தனது அரச வாழ்வைத் துறந்து ஞானம்பெற்று,”கௌதம புத்தர்”ஆனார்; இவர் உருவாக்கிய மதமே புத்தமதம்.

மௌரிய வம்சத்தில் தோன்றிய, சந்திரகுப்த மௌரியர், பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு தென்னிந்தியாவின் சிறு நிலப்பகுதியைத் தவிர பண்டைய இந்தியாவின் பெருநிலப் பகுதியை ஆட்சி செய்தார்; தமது ஆட்சியில் தொழில்,வணிகம், நீதி போன்ற பல்வேறு துறைகளைப் பிரித்துத் தமது மந்திரியான சாணக்கியரின் துணையோடு சிறப்பாக நிர்வகித்தார்.  சந்திரகுப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்த அசோகர் (கி.மு மூன்றாம் நூற்றாண்டு) தனது ஆட்சிக் காலத்தில், மக்கள் உரிமைச் சட்டம் போன்ற மக்களுக்கு நலம் தரும் பல திட்டங்களை உருவாக்கினார்.  தனது நாட்டை விரிவு படுத்தப் பல போர்களைச் செய்து வெற்றிகண்ட அசோகர், கலிங்கப் போருக்குப் பிறகு, 'இனி, போர் செய்வதில்லை' என உறுதி பூண்டு புத்த மதத்தைத் தழுவினார்.

               குப்தர்களின் காலத்தில் (கி.பி.மூன்றாம் நூற்றாண்டு) நாட்டின் கல்வி மற்றும் கலைகள் பெரும் வளர்ச்சியை அடைந்தன.  குப்தர்களின் ஆட்சிக் காலம் இந்தியாவின் 'பொற்காலம்' எனப்பட்டது. அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் சான்றாகத் திகழ்கின்றன.
                கன்னோசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஹர்ஷவர்த்தனர், மிகப் பெரிய யானைப் படையையும் குதிரைப் படையையும் கொண்டிருந்தார். நாட்டைப் ,பெரும் மற்றும் சிறு நிலப்பிரிவுகளாகப் பிரித்து ஆண்டு வந்தார். படை பலத்தால் மட்டுமன்றி நட்பு முறையிலும் அண்டை நாடுகளுடன் வாணிபத்தைப் பெருக்கினார்.
                
இதே கால கட்டங்களில் தமிழகத்தை ஆண்ட முற்காலச் சோழ மன்னர்களில் கரிகால் சோழன் (கி.பி.இரண்டாம் நூற்றாண்டு) மிகச் சிறந்த மன்னன் ஆவான். காவிரியில் 'கல்லணை'யைக் கட்டி விவசாயத்தைப் பெருக்கினான்; சிறந்த நீதிமானாகவும் விளங்கினான். முற்காலச்  சோழர்களின் தலைநகரம் உறையூர்.

                பிற்காலச் சோழ மன்னர்களில் ”முதலாம் இராஜராஜன்” (கி.பி985-1014) மிகவும் சிறந்த முறையில் ஆட்சி புரிந்த மன்னன் ஆவான். 'ஐம்பெரும் குழு', 'எண்பேராயம்' போன்ற அமைப்புகளை உருவாக்கி அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தான்;'குடவோலை' முறையில் மக்கள் பிரதி நிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்; நாட்டை மண்டலங்களாகவும் கோட்டங்களாகவும் பிரித்து ஆட்சி செய்தான். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவன். தேவாரப் பாடல்களைத் தொகுக்கச் செய்தவன். இவனுடைய தலைநகரம் தஞ்சையாகும்.

                இராஜராஜ சோழனின் மைந்தன் 'முதலாம் இராஜேந்திரன்' தந்தையைப் போலவே நல்லாட்சி புரிந்தான்; இமயம் வரை உள்ள பல அரசர்களை வென்று இமயத்தில் 'புலிக் கொடியை' நாட்டியவன் தன்னுடைய வெற்றியின் அடையாளமாக, கங்கை கொண்ட சோழபுரத்தில் தஞ்சைக் கோவிலைப் போன்று பெரியதோர் கோவிலைக் கட்டினான் முற்காலச் சோழர்களுக்கும் பிற்காலச் சோழர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் தெற்கே களப்பிரர்கள் ஆட்சி நடைபெற்றது

                மேலும், தமிழகத்தில், சேரர், பாண்டியர், சாளுக்கிய மன்னர்களும் ஆட்சி புரிந்துள்ளனர். பல்லவ மன்னர்களில் 'முதலாம் நரசிம்மவர்மன்' காலத்தில் சிற்பக்கலை செழித்தோங்கியது.
                 சேரமன்னர்கள் ரோமானியர்களுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்தனர்; பாண்டியன் முடத்திருமாறன் மதுரையில் மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவன்.

                 கி.பி பத்தாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரை இந்தியா மொகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. வட இந்தியாவில் டெல்லி சுல்த்தான்களும் தென்னிந்தியாவில் விஜய நகர அரசர்களும் ஆட்சிசெய்தனர்.

                 மொகலாய அரசர்களில் பாபரும் அக்பரும் சிறந்த அரசர்களாக விளங்கினார்கள். அக்பர் இந்தியர்களோடு; திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். சிற்பக்கலையும் கட்டிடக்கலையும் மேன்மை அடைந்தன. எல்லா மதங்களையும் நேசித்தார். மன்னர் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டிய 'தாஜ் மஹால்' உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

                மொகலாயர்களைத் தொடர்ந்து இந்தியாவின் இயற்கைச் செல்வங்களின்மேல் ஆசை வைத்த ஆங்கிலேயர்களும் மற்றும் சில ஐரோப்பியர்களும் கி.பி.பதினேழாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
                ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் போல இந்தியா பிற நாட்டவர்களின்   ஆட்சிகளுக்கு உட்பட்டே இருந்திருந்தாலும், அன்று மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் தோன்றிய கோவில்களும், சிற்பங்களும், ஓவியங்களும் கோபுரங்களும் உலகளவில் இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரப் பண்பாட்டுப் பெருமைகளை எடுத்துரைக்கும் சின்னங்களாகவும், இலக்கியங்கள் நம்நாட்டின் மொழியியல் வளத்தினைச் செப்புகின்ற வாயில்களாகவும் திகழ்கின்றன என்பதே உண்மை!
                                                                                                         -  சரோஜா தேவராசு.