பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 14 octobre 2011

இன்றைய எண்ணப் பரிமாற்றம்


 அன்புடையீர்,


நாட்டுப் பற்று என்ற ஒன்று இல்லாதிருந்தால், சரித்திரம் என்ற ஒன்று இல்லாமலே போயிருக்கும். குடும்பத்தில் உற்றவரிடையே பற்று இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு மனிதனுக்கும் மத, நாட்டுப் பற்று மட்டும் தேவைக்கும் அதிகமாகவே சில சமயங்களில் அவனை ஆட்டி வைக்கும் அளவுக்கு உண்டாகிவிடுகிறது.

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பது மிக உயர்ந்த பண்பாடென்றால், அந்தப் போர்வையின் கீழ் நாடு பிடிக்கும் ஆசையும் எல்லாவற்றையும் தனதாகவே பார்க்கச் சொல்லுகிறது. அதனால் விளையும் சிறப்புகளையும், சங்கடங்களையும் இந்தியாவைவிட வேறெந்த நாடும் அனுபவித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு, பல நாட்டவர் இங்கே ஆக்கிரமித்து, அதிகாரம் செலுத்தியுள்ளனர்.

ஏற்கனவே பலதரப்பட்ட பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும், கலைகளையும் தன்னகத்தே ;கொண்ட நம் நாடு, இந்தப் பல்வேறு கலாச்சாரங்களையும் ஏற்று இன்னும் 'இந்த நாட்டில் இல்லாததில்லை' என்று சொல்லுமளவுக்கு எல்லாத் துறைகளிலும் தன்னிகரற்று விளங்குகிறது.

'இறக்குமதி'  என்னும்போது அதில் அரிய ஒன்றுடன் குப்பையும் வர வாய்ப்பிருக்கிறது. எனவே இந்தியனின் பொறுப்பு முன்னெப்போதையும்விட இப்போது கூடியிருக்கிறது. பணம், பதவி, படாடோபம், வளர்ச்சி என்ற பேரால் வரம்பின்மை, பண்பாட்டு மறுதலிப்பு, பழைமை மீதான வெறுப்பு என்று அவனைப் படு குழியில் தள்ள, கவர்ச்சிகள் பல சுற்றி வருகையில் விழிப்புணர்ச்சியுடன் தள்ள வேண்டியதைத் தள்ளிக் கொள்ள வேண்டியதைக் கொள்ள அறிவைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவன் இருக்கிறான்!

எத்தனையோ இடர்களில் மாயாத அவன் மாண்பு என்றும் சாயாது என்ற நம்பிக்கையுடன் தொடர்வோம்!

திருமதி சிமோன்