பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 14 octobre 2011

இன்றைய அறிமுகம் - மகாத்மா காந்தி

 



  பாரதத்தின் தந்தை என்றும், மகாத்மா என்றும் அழைக்கப்படும் காந்தி அடிகள் 1869     -ஆம் ஆண்டு, அக்டோபர் 2 -ஆம் தேதி, குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்ற இடத்தில் மோகன்தாஸ் காந்தி என்ற பெயரில் கரம்சந்த் காந்திக்கும், புத்லி பாய்க்கும் மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் தென்னாப்ரிக்காவில் வேலைக்குச் சேர்ந்தார். அச்சமயம் தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறியும், இனப்பாகுப்பாடும், இவரை ஆங்கிலேயர்களுக்கு எதிராகப்   போர்க்கொடி தூக்கவைத்தன.

      பிறகு, பாரதத்தில் உள்ள மக்களின் நிலையை உணர்ந்து, அவர்களுக்காகப் போராடவேண்டும் என்ற முடிவில், தாயகம் திரும்பினார். 1930 -ஆம் ஆண்டு நடத்திய உப்பு சத்யாகிரகப் போராட்டமும், 'வௌ;ளையனே வெளியேறு” என்ற போராட்டமும் சரித்திரத்தில் முத்திரை பதித்தன. எந்த ஆயுதம் இன்றி, இரத்தம் சிந்தாமல், அகிம்சா வழியில் விடுதலை பெற முடியும் என்று உலகிற்கு நிரூபித்தார். இவருடைய கொள்கையில் அதிருப்தி அடைந்து,         1948 -ஆம் ஆண்டு சனவரி 30 -ஆம்; தேதி நாதுராம் கோட்சே என்ற நபர் காந்தியைச் சுட்டுக் கொன்றார்.

      காந்தி இந்த உலகத்தை விட்டு நீங்கினாலும், அவருடைய கொள்கைகளும், கருத்துகளும் உலக மக்களின் மனத்தில் நீங்காமல் வாழ்கின்றன. காந்தி வழியை மார்டின் லூதர் கிங், சேம்ஸ் லாசென், நெல்சென் மண்டேலா, ஆங் சண் சூகி ஆகியோர் கடைப் பிடித்துப் போராடி வெற்றி கண்டனர். ஐரோப்பாவில் ரோமன் ரோலன் இவரைப் பற்றி எழுதி இருக்கிறார். விஞ்ஞானி ஆல்பர்ட் ஐயின்ஸ்டன் இவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'இப்படி ஒருவர்   மனிதராக வாழ்ந்தார் என்பதை வருகின்ற தலைமுறை நம்புவதற்குக் கடினமாக இருக்கும”; என்றார்.

தாகூர் இவருடைய சிறந்த கோட்பாடுகளை மதித்து இவரை மகாத்மா என்று அழைத்தார். ஐக்கிய நாட்டுச் சபை இவர் பிறந்த நாளை அகில உலக அகிம்சை தினமாகக் கொண்டாடவேண்டும் என்று 2007  -ஆம் ஆண்டு சூன் 15 -ஆம்; தேதி, தீர்மானம் கொண்டு வந்தது. இந்த நீங்காப் புகழுக்கு அடிப்படைக் காரணம், காந்தி, சத்திய நெறிகளை வாழ்க்கை முழுதும் கடைபிடித்ததுதான். தமது  சிறந்த கொள்கைகளை,  சோதனைகள் வந்த பொழுதும் தீவிரமாகக் கடைப்பிடித்தார். சத்தியாக்கிரகத்தின் அடிப்படைத் தத்துவம் : எந்த எதிர்ப்புகளையும் எதிரிகளுக்கு எந்த விதமான தீமைகளையும் செய்யாமல் முறியடிப்பதுதான். இந்த உறுதி பூண்டு, அகிம்சை கொள்கையை அரசியலில் கடைப்பிடித்த முதல் மனிதர் இவரே ஆவார். கல்வியில், அறிவும் வேலையும் சேர்ந்த கல்வியே சிறந்தது என்றும், பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் காந்தி கருதினார். இந்துவாகப் பிறந்து அதைக் கடைப்பிடித்தாலும், எல்லா மதங்களும் சமம் என்றும் அதே நேரத்தில் எல்லா மதங்களும் கருணையையும் அகிம்சையையும்தான் வலியுறுத்துகிறது என்று கருதினார்.

அரிஜன், இந்தியன் ஒபினியன், எங் இந்தியா,  நவஜீவன் போன்ற பத்திரிகைகளை நடத்தினார். காந்தி தன் சுய சரிதையைச் சத்திய சோதனை என்ற தலைப்பில் எழுதினார்.

திருமதி சுகுணா சமரசம்