பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 14 octobre 2011

இந்திய வரலாற்று கருவூலங்கள்

  நம் நாட்டின் கட்டிடக் கலை, சிற்பக்கலை, இவற்றை வெளிப்படுத்துபவை அக்காலத்தில் மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்களும்  கோட்டைகளும் புராதன சின்னங்களாக    விளங்கும் கட்டிடங்களுமாகும் . மன்னர்களின் வரலாற்றைப் புத்தகங்களில் படிப்பதைக் காட்டிலும் அவர்களாளல் கட்டப்பட்ட இத்தகைய கட்டிடங்களைக் காணும்போது வரலாற்றை உணர்ந்த  அனுபவம் ஏற்படும். அப்படி நான் சென்று பார்த்த    இடங்களில் ஒரு  சிலவற்றைப்  பற்றிய  செய்திகளை  உங்களுடன் பகிர்ந்து  கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கோல்கொண்டா: 

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஐதராபாத் நகருக்கு மேற்கே 11கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது புராதன கோல்கொண்டா ராச்சியத்தின் (கிபி 1364 - 1512) தலைநகராக இருந்தது.  

கோல்லா கொண்டா  என்கிற தெலுங்கு  வார்த்தையின் பொருள் மேய்ப்பர் மலை என்பதாகும். ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் மலையில் சிலைவடிவ இறைவனைக் கண்டதாக நம்பப்படுகிறது. இதனையடுத்து இந்த இடத்தைச் சுற்றி அப்போது  ஆட்சியில்  இருந்த ககாதியா வம்ச அரசர்(13 ஆம் நூற்றாண்டு) ஒரு களிமண்  கோட்டையை  எழுப்பினார்.ககாதியா வம்சத்தை அடுத்து இக்கோட்டை வாரங்கல் அரசு,  பின் இஸ்லாமிய பாமினி சுல்தான் வம்சத்தால் கைப்பற்றப்பட்டது. அந்த வம்சம் வீழ்ச்சி கண்ட பிறகு   கோல்கொண்டாவை ஆண்ட குதுப் ஷாஹி  அரசர்கள்  தங்களை முகலாயர்களின்  ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டாவில் இருந்த  இந்த களிமண்  கோட்டையைப்  பெரும் கருங்கல் கோட்டையாகக்   கட்டியெழுப்பினர்.(இந்த நகரமும் கோட்டையும் 120 மீட்டர் (400 அடி) உயரமுள்ள ஒரு கிரானைட் மலையின் மீது கட்டப்பட்டுள்ளன). இவர்கள்  கட்டிடக் கலையில் மிகச் சிறந்தவர்களாய்த் திகழ்ந்தனர்.  1590  -ஆம் ஆண்டு தலைநகரம் ஐதராபாத்  நகரத்திற்கு மாற்றப்படும் வரை கோல்கொண்டா குதுப் ஷாஹி வம்சத்தின் தலைநகராய் விளங்கியது. குதுப் ஷாஹி அரசர்கள் கோட்டையை விரிவாக்கியபோது எழுப்பிய 7 கிமீ தூர சுற்றுச்சுவருக்குள் நகரம் அமைந்திருந்தது. இச்சுவற்றால் கோட்டை மற்றும் நகரம் இரண்டும் பாதுகாக்கப்பட்டது.கோல்கொண்டாவில் 87 அரை வட்ட கொத்தளங்களுடனான  நீள வெளிச் சுவர் கொண்ட நான்கு தனித்தனிக்  கோட்டைகள்  உள்ளன. கொத்தளங்கள் சிலவற்றில் இன்னும் பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கோட்டையில் எட்டு நுழைவாயில்கள், மற்றும் ஏராளமான அரண்மனை குடியிருப்புகள், அரங்குகள், கோவில்கள், மசூதிகள்  ஆகியவை  இருக்கின்றன.    கோட்டை முன்வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால் கூட 300 அடி உயர கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில்  சிறந்த ஒலியமைப்பை அவர்கள் வடிவமைத்து உருவாக்கியிருந்தனர். தாக்குதல் சமயத்தில் அரசர்களுக்கு எச்சரிக்கும் அமைப்பாக இது செயல்பட்டது. இது கோட்டையின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும்.( இதை இன்றும் வெற்றி வாயிலில் உணரலாம்).
 கோட்டைக்குள் இருக்கும் அரண்மனைகள், ஆலைகள், நீர் வழங்கு அமைப்பு மற்றும் பிரபல ‘ரபான்’ பீரங்கி ஆகியவை பார்ப்பவர்களைக் கவரத்தக்கவை.கோட்டையின் காற்றோட்ட அமைப்புகள் அற்புதமான வடிவமைப்பு கொண்டுள்ளன. கோடையின் வெம்மையில் இருந்து நிவாரணம் அளிக்கத்தக்க குளிர்ந்த காற்று கோட்டை உள்பகுதிகளுக்கும் எட்டும் வகையில் அவை அற்புதமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன.

ரகசியமான ஒரு சுரங்கப்பாதை சபை அரங்கில் துவங்கி மலை அடிவாரத்தில் இருக்கும் அரண்மனைகளில் ஒன்றில் சென்று முடிவதாக நம்பப்படுகிறது. குதுப் ஷாஹி அரசர்களின் கல்லறைகளும் இந்த கோட்டையில் உள்ளன. இஸ்லாமிய கட்டிடக் கலையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கல்லறைகள் கோல்கொண்டாவின் வெளிச் சுவருக்கு சுமார் 1 கிமீ வடக்கே அமைந்துள்ளன. இவற்றைச் சுற்றி அழகிய தோட்டங்களும் ஏராளமான அழகுறச் செதுக்கிய கற்களும் இடம்பெற்றுள்ளன. சார்மினாருக்கு ஒரு ரகசிய சுரங்கப் பாதை இருந்ததாகவும் நம்பப்படுகிறது.கோட்டையின் பெரும் வாயிற் கதவுகள் பெரிய கூரிய இரும்பு முனைகள் பொதிக்கப் பெற்றுள்ளன. கோட்டையை யானைகள் சேதப்படுத்தாமல் பாதுகாப்பதற்காக இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அவுரங்கசீபிற்கு எதிராக ஒன்பது மாதங்கள் தாக்குப் பிடித்த இந்த கோட்டை, நம்பிக்கைத் துரோகத்தின் விளைவாய் முகலாயர்களிடம் வீழ்ந்தது.முகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீபின் முற்றுகைக்கு ஆளாகி வீழ்ந்த பின் இந்த கோட்டை தகுந்த பராமரிப்பு இன்றி சிதையத் துவங்கியது.

 இந்நகரம் செல்வம் கொழிக்கும் வைர வியாபாரத்திற்கும் மையமாய் திகழ்ந்தது.

கோல்கொண்டாவைச் சுற்றியிருந்த பகுதிகளில் இருந்து அற்புதமான வைரங்கள் கிடைத்தன. ஈரானின் கிரீடக் கற்களில் மிகப் பெரியதும் மிகச் சிறந்ததுமான 185 காரட் (37 கி) உடைய தர்யா-இ நுர் இங்கிருந்து பெறப்பட்டதாகும். தர்யா-இ நுர் என்பதன் பொருள் ஒளிக் கடல் என்பதாகும். சுத்தமாக அல்லது மிகக் குறைந்த அளவு நைட்ரஜன் உள்ள வைரங்கள் கோல்கொண்டா வகை எனப்பட்டன. இவை 2ஏ எனவும் குறிக்கப்பட்டன. இவை மதிப்பு மிக்க வைரங்களாகும்.மேலும்  கோல்கொண்டா கோட்டையின் பாதுகாப்பு அறையில் புகழ்பெற்ற வைரங்களான கோஹினூர் மற்றும் ஹோப் வைரம் போன்றவை பாதுகாக்கப்பட்டிருந்தன. 
 சுற்றுலாத் துறை தற்போது இக்கோட்டையைப் பராமரித்து வருவதுடன் பொழுது சாய்ந்ததும் ஒலி - ஒளி காட்சிகள் நடத்துவதன் வாயிலாக பல மக்களை ஈர்க்கிறது என்றால் மிகையாகாது.(காட்சிகள் ஆரம்பிக்கும் முன்பாக கொசுமருந்து அடிக்கப்பட்டாலும் அவை நம்மை ஒரு கை பார்த்துவிடுகின்றன)         
 குதுப்மினார் கோபுரம்: 

இந்தியாவிலேயே உயர்ந்த கோபுரமாகக் குதுப்மினார் கருதப்படுகிறது. அந்தக் காலத்தில் எதிரிகளின் நடமாட்டத்தை இக்கோபுரத்தின் மீதிருந்து கண்காணித்துள்ளனர். இப்போதும் டெல்லி மற்றும் அதன் அருகில் வாழும் மக்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் பயன்பட்டு வருகிறது.     
தெற்கு ஆசியாவின் முதல் முஸ்லிம் ஆட்சியாளர் குத்புதின் இபுக் . மத்திய ஆசியாவில்  துருக்கியர் வம்சத்தில் பிறந்த இவர் சிறு வயதிலேயை அடிமையாக விற்கப்பட்டார். பல  கைமாறி கடைசியில் முகமத்கொரியால்  விலைக்கு வாங்கப்பட்டார்.தனது வீரதீர செயல்பாடுகளால் முக்கிய தளபதியாக விளங்கினார். கோரியின் மறைவுக்குப் பிறகு டெல்லி சுல்தான் ஆனார்.    முதலில் குவ்வாத் உல் இஸ்லாம் மசூதியை அமைத்த குத்புதீன் இபுக் , 1199 ஆம் ஆண்டு குதுப்மினாருக்கு அஸ்திவாரம்  போட்டார். மக்களை தொழுகைக்கு அழைப்பதற்காக இந்தக் கோபுரத்தை எழுப்பத் தொடங்கினார். இதன் முதல் அடுக்கு முற்றுப்பெற்ற நிலையில் இவர் தீடிரென மரணம் அடைந்தார். இவருக்குப்பின் ஆட்சிக்கு  வந்த இவருடைய மருமகன் சம்சுதீன் இல்துமூஷ், கோபுரத்தில் மேலும் மூன்று அடுக்குக்களை அமைத்தார். 1211 முதல் 1236 ஆம் ஆண்டுவரை கட்டடப்பணிகள் நடந்தன. அடிப்பாகத்தில் சுற்றளவு 14.32மீ, கோபுரத்தின் சுற்றளவு 2.75, உயரம் 72.5மீ.    கடைசி அடுக்கு 1386 ஆம் ஆண்டில் பெரோஷா துக்ளக் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது.     14,15 -ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னர்களால் பழுது பார்த்துச் சரி செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பக் காலத்தில் 7 அடுக்குகளுடன் 300 அடி உயரத்துடன் காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, 5 அடுக்குகளுடன் 233 அடி உயரத்துடன் காணப்படுகிறது. உச்சிக்குச் செல்ல 379 வட்ட வடிவில் அமைந்த படிக்கட்டுகள் உள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் உப்பரிகை அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு.  சிகப்பு நிறக் கற்களால் கட்டப்பட்டது. திருக் குரான் வாசகங்கள் இதில் பொறிக்கப்பட்டுக் காண்போர் கண்களையும் கருத்தையும் ஆக்கிரமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில்  ராபர்ட் ஸ்மித் என்ற கட்டடக்கலை வல்லுநர் இதைப் பழுதுப்பார்த்து அதிகபிரசங்கித் தனமாகக் குதுப்மினருக்கு ஒரு சிறிய கோபுரம்(ஆங்கில முறைப்படி) மரத்தால் செய்து பொருத்தினார். இயற்கை அதை அனுமதிக்கவில்லை! இடிவிழுந்து அது கோணலானது. பிறகு அது  இறக்கிக் கீழே வைக்கப்பட்டுப்   பரிதாபமாகச் சுணங்கிக் கிடப்பதை இன்றும் பார்க்கலாம். 

1993  ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இக்கோபுரம்  உலகப் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.    ஆண்டுதோறும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் டெல்லி மாநில சுற்றுலாத் துறையால் மூன்று நாட்கள் குத்துப் விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதில் இசை, நடனம், நாட்டியம் நடைபெறும். 
இதன் வளாகத்தில் உள்ள  அலை தர்பாஷா மெயின் கேட் , அல்துமிஷ் ஸ்தூபி  போன்றவை கலைநயம் மிக்கவை.

இரும்புத் தூண் (Iron piller)

சந்திரகுப்த விக்கரமாதித்ய மன்னர் கட்டியதாகச் சொல்லப்படும் இரும்புத் தூண் இந்த குதுப் மினார் வளாகத்தில்  இருக்கிறது.6 டன் எடையும் 22 அடி உயரமும் இருக்கும் இந்த இரும்புத் தூண் மழை, வெயிலினால் 1600 வருடங்கள்  எந்த வகையிலும் பாதிப்பு அடையவில்லை என்பதே இதன் சிறப்பம்சமாக விளங்குகிறது.
  பழங்கால இந்தியாவின் அதிசயச் சின்னமாகவும் கருதப்படுகிறது.உறுதியான இரும்பினால் 32 அடி 8 அங்குல உயர ஸ்தூபியாக உள்ளது. அடிப்பாகம் 6 அடி 4 அங்குலத்துடனும், உச்சி 2 அடி 4 அங்குலப் பருமனுடனும் காணப்படுகிறது. இதனை, 8 இரும்புக் கம்பிகளால் பூமிக்கடியில் கட்டி உறுதியாகவும் உயரமாகவும் நிறுவியுள்ளனர்.
அலை தர்பாஷா மெயின் கேட்
குதுப்மினாருக்குத் தென்கிழக்குப் பாகத்தில் காணப்படும் பெரிய நுழைவு வாயில். இது  உலகின் பெரிய உன்னத கேட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வாயிலின்  வெளிப்புற உள்புற வேலைப்பாடு, இந்தியா மட்டுமல்ல வேறு எங்கும்  பார்க்க முடியாத அழகான வேலைப்பாடுகளைக் கொண்டது எனலாம்.

 உலக வரலாற்றில் குதுப்மினார் கோபுரம், இரும்புத்தூண், அலை தர்பாஷா மெயின் கேட் ஆகியன உயிரோவியங்கள் என்ற பான்ஷேப் கூற்று நினைவுகூறத்தக்கது.


செஞ்சிக் கோட்டை

இந்தியாவின் தமிழ் நாடு  மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில  கோட்டைகளுள்  ஒன்றாகும்.  விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள செஞ்சியில் ,  மாநிலத் தலைநகரமான  சென்னையில்  இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான   பாண்டிச்சேரிக்கு  அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான   சிவாஜி , "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது.  ஆங்கிலேயர்கள்  இதனைக் "கிழக்கின்   ட்ராய் " என்றனர். பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.

 (எனக்கு பத்து வயது இருக்கும்போது என் தமிழ்ப் பாடநூலில் செஞ்சிக்கோட்டையின்  வரலாறு பாடப்பகுதி. எனவே நான் படித்த தனியார் பள்ளியிலிருந்து எங்களை இங்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். தற்பொழுது பாண்டிச்சேரியிலிருந்து பெங்களூர் செல்லும் போதெல்லாம் இந்த வழியாகத்தான் போகிறோம்.  அன்று பார்த்தவை இன்னும் பசுமையாக நினைவில்  உள்ளன).

வரலாற்றில் செஞ்சி

தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே  வலிமையாகத் திகழ்ந்த ஊர் செஞ்சி.
  முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு, சிங்கபுரி கோட்டம் என்றும் அழைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. 
கி.பி .3 முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன.
 பல்லவர் காலத்தில் (கிபி 600-900) சிங்கபுரதில் (சிங்கவரம்) ஒரு குகைகோவில் கட்டப்பட்டது. செஞ்சிக்கு   கிழக்குப்  பகுதியில்   காணப்படும் ஆனங்கூர் கல்வெட்டுக்களின் படி செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாகவும்  அவர்கள்  ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்ததாகவும் தெரிகிறது.  1014-1190 களில்  செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.
செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்டத் துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையைப் பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம்  -ஆண்டு முதல் 1529ம்  -ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.இக் கோட்டையைக் கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களின் கைக்கு வந்தது. அவர்கள், 1750  -இல் இதனைப் பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 -இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். பின்னாளில் செஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு.
அமைப்பு செஞ்சிக் கோட்டை இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய குன்றுகள்  (ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி  ), இரண்டு சிறிய குன்றுகள்  அவற்றை இணைக்கும் 12கி.மி.மதில் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள்   ராஜகிரி மட்டுமே  தனியாக எவற்றோடும் பொருந்தாமல் நிற்கும் குன்று.  240  மீட்டர்  (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள   அகழியினால்  காப்புச் செய்யப்பட்டிருந்தது. இந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக்   குளம்  ஒன்றும் இருந்தது. 
இந்தியாவில் தரைக்கோட்டை, மலைக்கோட்டை இரண்டும் இணைந்த கோட்டையாக செஞ்சிக்கோட்டை உள்ளது.
இந்தோ - இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்ட அரச தர்பார் மண்டபம் இம்மலையின் உச்சியில் உள்ளது. மேல் வளைவுகள் வரிசையாக அமைய, குவிமாடம் மூடிய கூரை என்று இம்மண்டபத்தின் வடிவமைப்பு உள்ளது. ரசிக்கத்தக்க மற்றொரு கட்டடம் போர்த் தளவாடக் கிடங்கு, இம்மலை மீது நாயக்கர் கால கட்டடக் கலையமைப்பைக் கொண்ட ரெங்கநாதர் கோயில் ஒன்றும் இருக்கிறது. இங்கு சென்றால் 4 மீட்டர் நீளமும் 2 மீட்டர் சுற்றளவும் கொண்ட பெரிய இரும்பு பீரங்கி ஒன்றையும் பார்த்து வரலாம்.
கோட்டையின் முழு அமைப்பு, பாதுகாப்பு அம்சங்களை இங்கே காணலாம். எதிரிகள் புக முடியாத கோட்டையாக மட்டுமின்றி இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் அரணாக செஞ்சி கோட்டையை வடிவமைத்துள்ளனர். இயற்கையின் கொடையாக மலைக் குகைகளில் நீர் சுனைகள் இருந்தாலும், மழை நீரை பாதுகாக்க மலை உச்சி முதல் அடிவாரம் வரை குளங்களை நமது முன்னோர்கள் அமைத்துள்ளனர். இந்தக் குளங்கள் நிறைந்த பிறகும் மழை நீர் வீணாகாமல் இருக்க இரண்டு அடுக்கு அகழிகளை அமைத்தனர். அகழிகள் ஆழமாகவும், அகலமாகவும் மழை நீரைச் சேமிக்கும் கிடங்காகவும் இருந்தன. போர்க்காலத்தில் கோட்டையை எதிரிகள் முற்றுகையிடும் போது நீர் நிலைகளைப் பயன்படுத்திக் காய்கறிகள், தானியங்கள் விளைவித்தனர். மேலும் பல மாதங்களுக்குத் தேவையான தானியங்களை சேமித்து வைக்கத் தானியக் களஞ்சியம், நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மூலிகைக் காடுகள் கோட்டைக்குள் இருந்தன. இங்குள்ள நீர்நிலைகள் நிரம்பும் போது கோட்டையின் தேவை மட்டுமின்றி செஞ்சி நகரிலும், சுற்றியுள்ள விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும். இதனால் ஆண்டு முழுவதும் தடையின்றி விவசாயம் நடக்கக் கோட்டையின் நீர் நிலைகள் உதவின. செஞ்சிக் கோட்டை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு இந்தப் பகுதிகான முக்கியத்துவம் குறைந்து அதிகாரம் முழுவதும் சென்னையில் இருந்து செயல்பட்டது. இதனால் செஞ்சிக் கோட்டை நீர் நிலைகளும் பாதுகாப்பின்றி தூர்வாராமல் அழியும் நிலைக்கு போயின. அகழிகளின் ஆழம் குறைந்து, சேமிக்கும் தண்ணீரின் அளவு 20 சதவீதமாகக் குறைந்தது.

கிருஷ்ணகிரி: இது தற்போதைய திருவண்ணாமலை சாலையின் தெற்கில் அமைந்துள்ள குன்றாகும்.இது ராஜகிரியை விடச் சிறியது.இதன் உச்சிக்குப் போகக் கருங்கல் படிகள் உள்ளன. இங்குக் காண்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இரு பிரமாண்டமான தானியக் களஞ்சியக் கட்டடங்கள், தூண்களில் உருவான மண்டபம், இரண்டு கோயில்கள், செங்கல் மாளிகை, வட்டமான பார்வையாளர் தர்பார் மற்றும் சிறு பீரங்கியும் உள்ளன. (பிற்காலத்தில் இதில் ஆங்கிலேயர்களின் குடியிருப்புக்கள் சில இருந்ததால் இது ஆங்கிலேயர்களின் குன்று என்றும் அழைக்கப்பட்டது)  
ராஜகிரியுடன் தொடர்பு கொண்ட மற்றொரு குன்று சந்திரகிரியாகும்.  இது அவ்வளவு முக்கியத்துவம் பெறவில்லை.
தற்போதைய நிலை.

இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921  -ஆம் ஆண்டில் இது    தேசிய நினைவுச் சின்னம்  என அறிவிக்கப்பட்டுத்   தொல்லியற் துறையின்  கீழ்க் கொண்டுவரப் பட்டது. அண்மைக் காலங்களில்   சுற்றுலாத்துறை  பொதுவாக மறக்கப்பட்டுவிட்ட இக் கோட்டையைப் பிரபலப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றது.

(விழுப்புரம் மாவட்டத்தில் காதலர்கள் விரும்பும் சுற்றுலா இடமாகச் செஞ்சிக் கோட்டை உள்ளது. பரந்து விரிந்துள்ள கோட்டையின் பல பகுதிகள், காதலர்கள் விருப்பம் போல் தனிமையில் இருக்க ஏற்ற இடமாக உள்ளன. இதனால், சாதாரண நாட்களிலும் ஏராளமான காதலர்கள் வருகின்றனர்.இங்கு பல பாலியல் வன்முறைகளும் திருட்டும் பாதுகாப்பு இன்மையும் உள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக  அறிந்து வருத்த மடைகிறோம்.  


 தஞ்சைப் பெரிய கோயில்

பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் எனவும் தென்னாட்டுக் கோயில்களுக்குள் மிக உயர்ந்த விமானத்தை உடையதால் ‘பெரியகோயில்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. இக்கோயில், 10  -ஆம் நூற்றாண்டில்,  சோழப் பேரரசு  அதன் உச்ச நிலையில் இருந்த பொழுது,   இராஜராஜ சோழ  மன்னனால் கட்டப்பட்டது.

இக்கோவில்  எழும்பியுள்ள தஞ்சாவூர்ப் பகுதி முழுவதும் ஆறுகள், வாய்க்கால்கள், வயல்வெளிகள் எனப் பாறைகளே இல்லாத சமவெளிப் பிரதேசம். இங்கு பெரிய பெரிய கற்பாறைகளைக் கொண்டுவந்து தரை கெட்டியாகவுள்ள செம்மண் பிரதேசத்தில் இக்கோயிலை அமைத்துள்ளதே மன்னனின்பொறியியல் திறமைக்குச் சான்று. இங்கு உபயோகப்படுத்தப்பட்ட பாறைகள் அனைத்தும் புதுக்கோட்டையை அடுத்த குன்னாண்டார்கோயில் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை.
அமைப்பு :
இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது ‘கேரளாந்தகன் திருவாயில்’ எனப்படும். மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றான்.
இந்தக்  கேரளாந்தகன் திருவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அடுத்து வருவது ‘இராஜராஜன் திருவாயில்’. அதையும் தாண்டி உள்ளே சென்றால் இருப்பது ‘நந்தி மண்டபமும்’ மாபெரும் நந்தி உருவமும். இப்போது அங்குள்ள பெரிய நந்தி நாயக்க மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்டது. மன்னன் ராஜராஜன் நிறுவிய பழைய நந்தி இப்போதும் ‘வாராஹி’ அம்மன் சந்நிதிக்கருகில் வைக்கப்பட்டிருக்கிறது.
இவ்விரு  வாயில்களையும் கடந்து சென்றால் ஆலயத்தைக் காணலாம்.ஆலயத்தின் மதிற்சுவரோடு இணைந்து நாற்புறமும் திருச்சுற்று மாளிகை அமைந்திருக்கிறது. அதன் வடபுற விமானத்துக்கருகே சண்டீசரின் சந்நிதி உள்ளது. இவ்வளவுதான் அந்த ஆலயத்தின் பழைய தோற்றம். திருச்சுற்று மாளிகையில் பல பரிவார தேவதைகளுக்கான சிறு சந்நிதிகள் உண்டு. பழைய காலத்தில் வடக்குப் புறம் ஓர் அம்மன் ஆலயம் இருந்ததாகத் தெரிகிறது.
ஆலயத்தின் மகாமண்டபம், அர்த்தமண்டபம் இவைகளைத் தாண்டிச் சென்றால் ஆலயத்தின் கற்றளி விமானம் இருக்கிறது. இராஜராஜேச்சரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்கத் திருவுருவம் நடுவே திகழ, ஒரே வாயிலுடனும் 11அடி கனமுடைய சுற்றுச் சுவர்களுடனும் கருவறை உள்ளது.
இங்குதான் மிகப்பெரிய சிவலிங்கம் மூலவராகக் காட்சியளிக்கிறார். பெருவுடையார் எனப்பெயர் பெற்று விளங்கும் இந்த லிங்கத் திருமேனி முழுவதும் கருங்கல் பாறையில் செதுக்கப்பட்டது. மூன்று பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இதில் நடுவில் லிங்கபாணம் நீண்ட தூண்வடிவில் இருக்கிறது. அதன் மேல்பாகம் உருளை வடிவில் இருக்கிறது. இதன் பீடப்பகுதி சதுர வடிவில் இருக்கிறது. நடுப்பகுதியில் எண்பட்டை அமைப்பில் இருக்கிறது. இது தரையிலிருந்து 12 அடி 10 அங்குல உயரத்தில் இருந்தாலும் இதன் அடிப்பகுதி தரைக்குள் 3 அல்லது 4 அடியாவது புதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏறத்தாழ இது 16அடி உயரமுடைய ஒரே கல்லிலால் ஆன லிங்க வடிவமாகும்.

தஞ்சாவூர் நகருக்குள் நுழை ந்ததும், நம் கண்ணில் படுவது பெரிய கோயிலில் உள்ள விமானமே. இதை “தென்கயிலாயம்’ அல்லது “தட்சிண மேரு விமானம்’ என்பர். கயிலாய மலையைப் போலவும், புராணங்களில் சொல்லப்படும் மேரு மலையைப் போலவும் உயரமாக இரு ப்பதாக இது வர்ணிக்கப் படுகிறது. தரை மட்டத்தில் இருந்து 216 அடி உயர முடை யது. பீடம் முதல் கலசம் வரை கருங் கற்களால் அமை க்கப்பட்டது. வாய் அகலமான கூம்பு வடிவப் பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்தது போல இருக்கும் இவ்விமானத்தின், உட்புறத்தை, வெற்றிடமாக அமைத்தி ருப்பது அரிய விஷயமாகும் (புவியீர்ப்பு மையத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது). விமானத்தின் மேலுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட செப்புக்கலசம் 12அடி உயரமுள்ளது. விமானத்தில் நான்கு தளங்கள் உள்ளன. அவற்றிற்கும் மேல் பார்வதியும் சிவபெருமானும், தேவர்களும், கணங்களும் சூழ அமர்ந்துள்ளனர். கயிலாயத்தில் அவர்கள் இருப்பது போல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. 
கோவிலின் வெளிச்சுவருக்கும், உள்சுற்றுச் சுவருக்கும் இடையில் அருமையான பூங்கா மற்றும் நடைபாதை. கோவிலின் வெளிச்சுவருக்கு வெளியே ஒரு கோட்டை போன்ற அமைப்பும், ஒரு அகழி போன்ற வாய்க்காலும் காணப்படுகிறது. இது அகழி அல்லது கோவிலின் பின்புறம் பக்கவாட்டில் இருக்கும் தெப்பக்குளத்திற்குத் தண்ணீர் வரும் வாய்க்காலாக இருந்திருக்க வேண்டும். இக்கோவில் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது.
 இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை.

இக்கோவில்  ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல. இது தமிழக வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் பெட்டக மாகத் திகழ்கிறது.

கல்வெட்டுக்கள்

இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள் , இக் கோயிலில் இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது. ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.
கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும்,சிற்பிகளும் தேவார ஓதுவார்களும்  இசைவாணர்களும், நடன மாதர்களும் , மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன.இந்தக் கோயிலால் ஆன்மீகம் வளர்ந்தது, கலைகள் செழித்தன; சோழநாட்டின் பொருளாதாரம் சிறந்தது என்பது போன்ற பல சாதனைகளைச் சொல்லி மகிழலாம்.

நந்தி

நந்தி மண்டபமும் அங்கே அமைந்திருக்கும் மாபெரும் நந்தியும் நாயக்க மன்னர்களின் கொடை.  நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும்.இந்த  மண்டபம் 5அடி உயரமுடைய மேடைமீது 16 தூண்கள் கொண்டு எழுப்பப்பட்டிருக்கிறது. மேற்கூரை ஒரே சமதளமாக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் அமைந்துள்ளது.
தென்னக பண்பாட்டு மையம் தங்கள் கலை நிகழ்ச்சிகளையும், நாட்டியம், இசை போன்றவற்றை இவ்வாலயத்தின் நந்தி மண்டபம் அருகே நடத்துகின்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சியில் இவ்வாலயம் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. யுத்த காலத்தில் சிப்பாய்களும், இரண்டாம் உலக யுத்தத்தின் போது விமானப்படை தாக்குதலை சமாளிக்க நிறுவப்பட்ட ஒரு படையும் இவ்வாலயத்தினுள் முகாமிட்டிருந்தனர். சுதந்திர இந்தியாவில்கூட பல ஆண்டுகள் இவ்வாலயத்துக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருந்தன. இது தொல்பொருள் இலாகா வசம் இருப்பதால் அவர்கள் இதனை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்துபோகவும் பல ஏற்பாடுகளைச் செய்து வைத்தனர்.

   தஞ்சை பெரிய கோவிலுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954 ஆம்  ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 1000 ரூபாய் நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது.

இங்கு அமைந்துள்ள அறிவியல், கலை மற்றும் பண்பாட்டு மரபியல் சிறப்புகளைக் கண்டறிந்த யுனெஸ்கோ நிறுவனம் 1987 -இல், இக்கோயிலை உலகப் பாரம்பரியச் சின்னமாக ஏற்று அதற்குரிய பட்டத்தையும் வழங்கியுள்ளது. இதன்படி எதிர்காலத்தில் உலகப்போர் மூண்டாலும் இக்கோயிலின் மீது எவ்விதத்தாக்குதலையும் எந்த நாடும் நடத்திச் சேதப்படுத்திவிடக்கூடாது என உலக நாடுகள் அனைத்திற்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது உலக அரங்கில் தமிழனின் பாரம்பரியச் சிறப்புக்குக் கிடைத்த கவுரவமாகும்.
தஞ்சை பெரிய கோவில் 1006   -ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010   -ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது . ஆயிராம்  ஆண்டு நிறைவு விழா தஞ்சை மாநகரில்  2010 செப்டம்பர் 25, 26   ஆகிய 2 நாட்கள்  சிறப்புற நடத்தப்பட்டது. இதன் பெருமையை ஒரு முறையாவது நேரில் வந்து பார்ப்பவர்களால்தான் புரிந்து கொள்ள முடியும்.மாமல்லபுரம்

 

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம்  மாவட்டத்தில் இருக்கும் ஒரு  பேரூராட்சி  ஆகும்.  7  -ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின்  முக்கிய துறைமுகமாக  விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் என்றும் வழங்கப்படுகிறது.சென்னையில் இருந்து சுமார்      60 கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. ஐரோப்பிய பயணக் குறிப்புகளில் மாமல்லபுரம் 7 குகைக் கோவில்களைக் கொண்டது என்று தெரிவித்து உள்ளனர். அதேபோல, இத்தாலிய பயணக் குறிப்புகளிலும் இந்தத் தகவல் தெரிய வருகிறது. இப்போது உள்ள ஒரு கோவிலைத்  தவிர மற்ற கோவில்கள் கடலுக்குள் மூழ்கிவிட்டன.
இந்நகரில் உள்ள கடற்கரைக் கோயில் உலகப்புகழ் பெற்றது. இது இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700- 728 -உக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை. ஆனந்தமும், ஆன்மீகமும் தழுவும் இடம் இந்தக் கடற்கரைக் கோவில்.

ஐந்து இரதம்


இயற்கையான பாறையைச் செதுக்கி தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில்,  தேர்  போல காட்சியளிப்பதால் அவை இரதம் எனப்படும். முதலாம் நரசிம்மவர்மன்      என்னும் மாமல்லனின் (கி.பி. 630 - 668) அரிய படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்கு சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காகச் சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டவையாகும்.


இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுப் பட்டை சிகரத்தையுடைய தர்மராஜ இரதம்,  பீம இரதம், சதுரமான சிகரத்தையுடைய திரௌபதி இரதம் மற்றும் கெஜபிருஷ்டம் சிகரத்தையுடைய நகுல-சகாதேவ் இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிகளுக்காகத்  தோற்றுவிக்கப்பட்டவையே என்பதை அவற்றின் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின் மீது பொருத்தப்படாமல் இருப்பதிலிருந்து அறியலாம். தர்மராஜ இரதத்தில் காணப்படும் அழகு வாய்ந்த சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் பல்லவர் சிற்பக்கலைத் திறனுக்கு ஓர் ஒப்பற்ற சான்றாகும் மேலும் பல்லவ-கிரந்த எழுத்துக்கள் பொறிப்புடைய முதலாம் நரசிம்மவர்மனின் விருது பெயர்களும் அந்த இரதத்தில் காணப்படுகின்றன.

அர்ச்சுனன் தபசு


சுமார் 30மீட்டர் உயரம், சுமார் 60மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அருச்சுனன் தபசு  என்றழைக்கப்படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏதோ ஒரு புராணக்கதை அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டிக்கலாம் எனத் தெரிகிறது. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் பூதகணங்கள் சூழநின்று வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காகச் சிவனை நோக்கி அர்ச்சுனன் தவமிருந்ததைக் குறிப்பதால் அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படுவதாக ஒரு கருத்தும் உண்டு.

  இதில் நான்கு நிலைகள் இருப்பது தெரியும். முதல் நிலை விண்ணுலகத்தை குறிக்கிறது. இரண்டாவது விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் இடைப்பட்ட நிலையை குறிக்கிறது. மூண்றாவது மண்ணுலகம், நான்காவது பாதாள உலகத்தையும் உணர்த்துவதாக ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

மகிஷாசுரமர்த்தினி சிற்பம்


கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பம் சிறப்பு வாய்ந்தது. மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் சக்தி, மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபம்.
 மாமல்லபுரத்தில் காணப்படும் சிற்பங்கள் கடவுளரின்  உருவங்கள்,புராணக்கதை    நிகழ்வுகள் என்பவற்றுடன் இயற்கை வனப்புகளையும், அக்காலத்துச் சமூக நிகழ்வுகளையும் கூடப் படம்பிடித்துக் காட்டுகின்றன எனலாம். இங்கே காணப்படும் சிற்பங்கள் பெரும்பாலும் புடைப்புச் சிற்பங்களாகவே  காணப்படுகின்றன. புடைப்புச் சிற்பங்கள் நாற்புறத்திலிருந்தும் பார்க்கக்கூடிய முப்பரிமாண அமைப்பிலுள்ள சிற்பங்களாகவன்றி,-  சுவரிலிருந்து வெளித்தள்ளிக் கொண்டிருப்பது போல் அமைந்தனவாகும்.

சிறப்பு வாய்ந்த மகாபலிபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக 1984ல் யுனெஸ்கோ அறிவித்தது.
டிசம்பர்- ஜனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது.

தாஜ் மகால்:   


இந்தியாவிலுள்ள நினைவுச் சின்னங்களுள் , உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ராவில் யமுனை ஆற்றின்  கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களில்  தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம்   முகலாய  மன்னனான  ஷாஜகானால் , இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ்  நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு  1631  முதல்  1654  ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாக கூறுவர்.
தாஜ்மகால், பாரசீக கட்டிடக்கலை  மரபுகளையும், முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும், அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது.  தைமூரிய, முகலாயக் கட்டிடங்களான சமர்க்கண்டிலுள்ள தைமூரின் சமாதி, ஹுமாயுன் சமாதி , ஷா ஜகான் கட்டுவித்த, டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித்  ஆகிய கட்டிடங்கள் இதன் வடிவமைப்புக்கு அடிப்படையாக அமைந்தன. முன்னைய கட்டிடங்கள் சிவப்பு நிறக்  கற்களால் கட்டப்பட்டிருந்தன. ஷா ஜகான் வெண்ணிறச்    சலவைக் கற்களைப்  பயன்படுத்தியுள்ளான்.

தாஜ்மகாலின் மையம் வெண்ணிறச் சலவைக் கல்லாலான சமாதிக் கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமைந்த, சமச்சீர்  வடிவம் கொண்டதும்,வளைவு    வடிவிலான நுழை வாயில், பெரிய குவிமாடம்  ஆகியவற்றைக் கொண்டதுமான  கட்டிடம்.  இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட  அமைப்பு ஆகும். இக் கட்டிடத்தின் சலவைக்கல் குவிமாடம் ஏறத்தாழ 35 மீட்டர் உயரம் கொண்டது.   வெங்காய  வடிவம் கொண்ட இக் குவிமாடம் 7 மீட்டர் உயர உருளை  வடிவமான அமைப்பின் மீது உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. இதன் உச்சியில்  தாமரை  வடிவ அலங்கார அமைப்பின் மீது அழகான கலசம் காணப்படுகிறது. பாரசீக, மற்றும் இந்து அம்சங்களை உடையதாகக் காணப்படும் இது கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிறது. இக் கலசம் 1800  -ஆம் ஆண்டுவரை தங்கத்தினால் ஆனதாக இருந்ததாகவும் பின்னர் வெங்கலத்துக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதன் உச்சியில் இஸ்லாம் மதத்தைக் குறிக்கும் பிறை உள்ளது. இப் பெரிய குவிமாடத்தைச் சுற்றிலும் நான்கு சிறிய குவிமாடங்கள் உள்ளன. இவையும் பெரிய குவிமாடத்தைப் போலவே வெங்காய வடிவம் கொண்டவை. வட்டமான வரிசைகளில் அமைந்த தூண்களில் தாங்கப்பட்டுள்ள இச் சிறிய குவிமாடங்களுக்குக் கீழிருக்கும் கூரை  திறந்து உள்ளதால் அவற்றினூடாகக் கட்டிடத்தின் உட்பகுதிக்குச் சூரிய ஒளி     செல்லக்கூடியதாக உள்ளது. கூரைப்பகுதியில் உள்ள சுவர்களின் மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகள் கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகின்றன.

அடித்தளத்தின்  ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொன்றாக நான்கு மினார்கள்  அமைந்துள்ளன. கட்டிடத்தின் முதன்மைக் கூடத்தில் மும்தாஜினதும், ஷா ஜகானினதும் போலியான அடக்கப் பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் கீழ்த் தளத்திலேயே உள்ளது.

அடித்தளத்தின் மூலைகளில் கட்டப்பட்டுள்ள மினார்கள் எனப்படும் கோபுர அமைப்புக்கள் 400 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கின்றன. இவை மரபுவழியாக இஸ்லாமிய மசூதிகளில் காணப்படும், தொழுகைக்காக மக்களை அழைப்பதற்குப் பயன்படும் மினார்களைப் போல் அமைக்கப்பட்டுள்ளன. கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் உருளை வடிவ அமைப்பைக் கொண்ட இவை ஒவ்வொன்றையும் சுற்றி, இடையில் அமைக்கப்பட்டுள்ள உப்பரிகைகள்  அவற்றை மூன்று சம அளவான பகுதிகளாகப் பிரிக்கின்றன. இவற்றின் உச்சியிலும் ஒரு உப்பரிகையும் அவற்றின் மேல் குவிமாடங்களுடன் கூடிய கூடுபோன்ற அமைப்புக்களும் காணப்படுகின்றன. இக் குவிமாடங்கள், முதன்மைக் கட்டிடத்திலுள்ள குவிமாடங்களின் அதே வடிவில் சிறிய அளவுள்ளவையாகவும் அங்குள்ளதைப் போன்றே தாமரை வடிவ அலங்காரம், கலசம் ஆகியவற்றைக் கொண்டனவாகவும் உள்ளன.

வெளிப்புற அழகூட்டல்


தாஜ்மகாலின்  வெளிப்புறம்  முகலாயக் கட்டிடக்கலைச்  சார்ந்த பிற கட்டிடங்களோடு ஒப்பிடும்போது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக் கட்டிடத்தின் வெளிப்புற அழகூட்டல், நிறப்பூச்சு, சாந்துப்பூச்சு அல்லது கற்கள் பதித்தல் மூலம் செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய மரபுகளுக்கு இணங்க அழகூட்டல்களில், வனப்பெழுத்துகளும் , செடி கொடி வடிவங்களும் பயன்பட்டுள்ளன. தாஜ்மகாலில் பயன்படுத்தப்பட்டுள்ள வனப்பெழுத்துக்கள் "துலுத்" எனப்படும் வகையைச் சார்ந்தது.  இவ் வனப்பெழுத்துக்கள் சலவைக்கல்லில், சூரியகாந்தக் கற்கள்  பதித்து உருவாக்கப்பட்டவை.

உட்புற அழகூட்டல்


இப்பகுதியில், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. உட்கூடம்  எண்கோண   வடிவானது. இதன் எல்லாப் பக்கங்களிலும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன எனினும் தெற்குப் பக்கப் பூங்காவை நோக்கியுள்ள வாயில்  மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. உட்புறச் சுவர்கள் சுமார் 25 மீட்டர் உயரம் கொண்டவை. இவற்றின் மேல் சூரிய உருவினால் அழகூட்டப்பட்ட "போலி"க் குவிமாடம் அமைக்கப்பட்டுள்ளது.

பூங்கா


தாஜ்மகால் கட்டிடத் தொகுதி, 300 மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு முகலாயப் பூங்காவைச் சுற்றி அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நடை பாதைகள், பூங்காவின் நான்கு காற்பகுதிகளையும் 16 பூம்படுகைகளாகப் பிரிக்கின்றன. கட்டிடத்துக்கும் தொகுதியின் நுழைவாயிலுக்கும் இடைப்பட்ட பகுதியின் நடுவில் ஒரு குளம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு அச்சில் நின்று பார்க்கும்போது கட்டிடத்தின் பிம்பம்  இக் குளத்தில் தெரியுமாறு அமைந்துள்ளது. பூங்காவின் பிற இடங்களில் மர வரிசைகளுடன் கூடிய பாதைகளும், செயற்கை நீரூற்றுக்களும் காணப்படுகின்றன.

 இப் பூங்காவைப் பற்றிய பழையகாலக் குறிப்புக்கள், இங்கே பலவிதமான பூஞ்செடிகளும் பழமர  வகைகளும் ஏராளமாக இருந்ததாகக் கூறுகின்றன. முகலாயப் பேரரசு சரிவடையத் தொடங்கியதோடு இப் பூங்காவின் பராமரிப்பும்  குறைந்தது. இப்பகுதி பிரித்தானியர் கைக்குப் போனபோது அவர்கள் இப் பூங்காவின் அமைப்பை மாற்றி இலண்டனில் உள்ளது போன்ற புற்றரைகளை அமைத்தனர்.

வெளிக் கட்டிடங்கள்


தாஜ்மகால் தொகுதி மூன்று பக்கங்களில் செந்நிற மணற்கற் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. யாமுனை ஆற்றை நோக்கியுள்ள பக்கத்தில் சுவர்கள் இல்லை. சுவருக்கு வெளியே ஷா ஜகானின் ஏனைய மனைவியர்களுடையவை உட்பட மேலும் பல சிறிய சமாதிக் கட்டிடங்கள் உள்ளன. இவற்றுள் சற்றுப் பெரிய கட்டிடம் மும்தாஜின் விருப்பத்துக்குரிய பணிப்பெண்ணுடையது.  சுற்றுச் சுவர்களின் உட்பக்கங்களில், வளைவுகளுடன் கூடிய தூண் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முக்கியமாகச் சலவைக்கல்லால் அமைக்கப்பட்ட முதன்மை நுழைவாயில் முந்திய பேரரசர்கள் காலத்து முகலாயக் கட்டிடங்களை நினைவூட்டுகிறது. இது சமாதிக் கட்டிடத்தை ஒத்த வளைவுகளையும், புடைப்புச் சிற்பங்களையும், பதிப்பு அழகூடல்களையும் கொண்டுள்ளது.
தற்போதைய நிலை:
தாஜ் மஹால் அமில மழையால்  மெல்ல மெல்ல சேதமடைந்து வருகிறது. அருகில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.1996  -ஆம் ஆண்டு இந்திய உச்சநீதி மன்றம் தாஜ்மஹாலைச் சுற்றி உள்ள 10,400 சதுர கிலோ மீட்டர் பகுதியில் உள்ள அனைத்துத் தொழிலகங்களும் நிலக்கரிக்குப் பதில் இயற்கை எரிவாயுவையே பயன்படுத்த வேண்டும் என ஆணையிட்டது.

-தொகுப்பாளர் : லூசியா லெபோ