பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 14 juillet 2010

சிறு கதை

அந்திப் பொழுதில் உதயம்

     மனம் போன போக்கில் அவர் நடந்து கொண்டிருக்கிறார். எண்ணங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. எதிலும் பற்றில்லை. விரக்தி. உலகம் இவரை ஒதுக்கிப் புறக்கணித்து, தன்வழி சென்றுவிட்டது போல ஒரு பிரமை. தன்னைத் தவிர அனைவரும் ஒரு அர்த்தத்துடன், ஓர் இலக்குடன் வாழ்வதாகத் தோன்றுகிறது. காண்போரெல்லாம் மகிழ்ச்சியாக ஆடிப்பாடும் போது, தான் மட்டும் வெறுமையின் நிழலாக உலவுவதாக உணருகிறார். வீசுகின்ற தென்றல் அவரது புழுக்கத்தைப் போக்கவில்லை. தண்ணிலவு அவரைக் குளிர வைக்கவில்லை. மின்னுகின்ற தாரகைகள் அவர் கவனத்தைக் கவரவில்லை. தவழ்ந்து செல்லும் சிற்றோடையோ, அதன் கரைகளில் அசைந்தாடும் பசும்புற்களோ அவரை ஈர்க்கவில்லை. இந்த இனிய சூழலுக்கு ஒரு விலக்காய், இயற்கையின் பண்ணுக்கு ஒவ்வாத சுருதியாய், இரவு ஓவியத்தின் கறையாய், மனித இனத்தின் தனிப்பிரதிநிதியாய் அங்கே அவர் நின்று கொண்டிருக்கிறார்.

     இவர் ஏன் இப்படித் தாமரையிலைத் தண்ணீராக இருக்கிறார்?  இவரது இளமைக் கனவுகளில் துள்ளல் இல்லாமலா இருந்திருக்கும்? நுண்ணிய உணர்வுகளில் ஆசை பொங்காமலா இருந்திருக்கும்? அத்தனையும் எங்கே! வாழ்க்கை பாரம் அந்த மென்மையைச் சிதைத்து விட்டதா? பட்ட அடிகள் உருக்குலைய வைத்து விட்டனவா? கால ஓட்டத்தில்  மனம் மரத்துவிட்டதா?

     மங்கிய நிழற்படமாகத் தன் கடந்த காலம் அவரைச் சூழ்கிறது. வேலையின்றி நோயாளியாக வளைய வந்து கொண்டிருந்த தந்தை. வீடு நிறைந்த குழந்தைகளையும், அவரையும் சேர்த்துப் பராமரிக்கும் சுமையின் அழுத்தத்தில் குன்றிப்போனத் தாய். எட்டோடு ஒன்பதாக, காட்டுச்செடியாய்த் தானே வளர்ந்த இளம்பருவம். விரும்பிய எதுதான் கிடைத்தது! நிறைவேற முடியாத கனவுகளைச் சுமந்து கொண்டே வாலிபத்தில் கால் பதித்தாயிற்று.

     அது மட்டும் வசந்தமாகவா இருந்தது? இளங்குருத்தாய் முளைவிட்ட காதல் துளிர்விடு முன்பே சூழ்நிலைச் சூறாவளியில் சிக்கிச் சிதறிப் போயிற்று. தவிர்க்க இயலாத படியென்று எண்ணி ஏற்றுக் கொண்ட இல்லறம் எவ்விதச் சிறப்புமின்றித் தொடர்ந்து.....பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் சூழ்ந்தனர். கடமையில் காலம் பறந்தது. மாறுகின்ற உலகம் இவர் மாற வழி வகுக்கவில்லை! குழந்தைகள் வளர்ச்சியில் இவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை அல்லது அவர்களது கனவுகளோடு இவரால் இணைய முடியவில்லை. ஏதோ ஒன்று மென்திரையாய் இவரைப் பிரித்தது. இதுதான் தலைமுறை இடைவெளியோ! தன் சொந்த இரத்தத்தில்-தான் தொட்டு, பேணி காத்த உயிருக்கும் தனக்கும் இடையே வெளியா? தன் குழந்தைகள் மீது உயிரையே வைத்திருப்பதாகக் கூறும் இந்தத் தலைமுறை, அவர்கள் வருங்காலத்துக்காகத் திட்டமிடும் தங்களைப் போலவே தங்களது பெற்றோரும் இருந்திருப்பார்கள் என்பதை ஏன் புரிந்துகொள்ளவில்லை அல்லது புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?

     இவரால் எதையும் பிரித்துணர இயலவில்லை. தன் மனம் யாரை, எதற்காக, ஏன் சாடுகிறது என்று விளங்கவில்லை. எது தன்னைப் பிறரிடம் கலக்கவிடாமல் தடுக்கிறது என்று தெரியவில்லை. முழு உலகும் வாழ்நாள் முழுதும் தன்னை வஞ்சித்ததுபோல் அதை உதாசீனப்படுத்தி விலகி நிற்கிறார். இப்படித் தனித்திருப்பதை வயதிற்கே உரிய துறவு மனப்பான்மையாக நினைக்கிறார். வேறு எதைப்பற்றியும் சிந்திக்க முன்வராத தன் போக்கை பரம்பொருளைத் தேடும் முதல் முயற்சியாகப் பாவித்து, அதில் பெருமையும் கொள்கிறார். உலக வாழ்வுக்குத் தன்னைப் பொருத்தமட்டில் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக முடிவுகட்டி விடுகிறார்.

     படைப்பின் விசித்திரங்களில் ஒன்று இது. மனிதனைத் தவிர வேறு எந்தப் பிறவியும் கற்பனையில் சுகங்கண்டதில்லை. தனிமையில் இனிமை காண்பதில்லை. கடந்த காலத்தை எண்ணி பெருமூச்சு விட்டதில்லை. நிகழ்காலத்தை ஒப்பிட்டு ஏங்கியதில்லை.எதிர்காலத்தை நோக்கி பயந்ததில்லை. தான் பிறப்பெடுத்ததற்காக வருந்தியதில்லை. பிறரோடு கலப்பதில் தயங்கியதில்லை. மனத்தாங்கலும், விரோதமும் கொண்டு ஒதுங்குவதில்லை. எல்லாவற்றையும் விட்டு ஓடியதில்லை. காணாத ஒன்றுக்காக ஏங்கி, கண்காணும் நிதர்சன வாழ்வை புறக்கணிப்பதில்லை. சங்கடங்களை உருவாக்கிக்கொள்பவன் இவனே!  அறிவுதான் இவனது சத்துரு. தானே தனக்கொரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, அதைவிட்டு இம்மியும் நகராது, தன் கருத்தோடு இசைபவர்களை மட்டுமே அதில் சேர்த்து, பிறரை எதிரிகளென பாவிக்கும் இந்தத் தன்மைதான் மனிதகுலத்திற்கே சாபம்!

     “தாத்தா”..... மென்குரலொன்று அவர் மோனத்தைக் கலைக்கிறது. இலக்கின்றி அலைந்துகொண்டிருந்த எண்ணங்களைத் திருப்புகிறார். அவரது மகள் வயிற்றுப் பேத்தி. தங்கரதம் போல் நிற்கும் அவளை ஏறிட்டுப் பார்க்கிறார். வாஞ்சையுடன் கரம்பற்றி அவரருகில் அவள் உட்காருகிறாள். வழக்கம்போல இச்சிறுமியிடம் என்ன பேசுவது என்று புரியாமல் மௌனம் சாதிக்கிறார். ஆனால், வழக்கம் போலல்லாது, அவளும் மௌனமாக ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பது இவருக்கு லேசான ஆச்சரியத்தை அளிக்கிறது. “ஏன் என்னவோ போல இருக்கே!” என்று கேட்கிறார். “ஒன்னுமில்லே தாத்தா, வினோத் வரலியேன்னு பாக்கறேன்”. தினம் சந்திக்கும் அண்டை வீட்டுத் தோழனுக்குக் காத்திருப்பதில் எதற்கு இத்தனை வாட்டம் இவள் முகத்தில்?  “என்ன வி்ஷயம்?” என்று விசாரிக்கிறார். “அவனுக்கும் எனக்கும் சண்டை” தயங்கியபடி அவர் முகத்தைப் பார்த்த அவள், தாத்தா என்ற உரிமையோடு, தன்னை அவர் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கையோடு அவர் மீது சாய்ந்துகொண்டு தொடருகிறாள். தன்னையறியாது, அவள் நெருக்கத்தால் உந்தப்பட்டு, அவளை அணைத்துக் கொள்கிறார்.

     "கடற்கரையிலே நான் கட்ன வீட்டை இடிச்சிட்டான் தாத்தா, நல்லா திட்னேன்...அதான்... வருவானா, இல்லியான்னு தெரியலே”. “வராட்டா போறான். அதுக்கு நீ ஏன் வருத்தப்படறே!” தனக்கே உரித்தான ஒதுங்கிக் கொள்ளும் பாணியில் அவர் கூறினார். அவளோ இன்னும் தயங்கியபடி, “அவன் என்னோடே நண்பன்தானே தாத்தா! இப்ப அவன்கிட்ட பேசாட்டா அது பெரிய சண்டையாயிடுமில்ல...அப்புறம் நாங்க சேரவே மாட்டோமே!” புதுமையாக அவளைப் பார்த்தார் அவர். என்ன இந்தக் குழந்தை! தன்மீது தவறில்லாத போதும், தீங்கிழைத்தவன் முன்பொரு முறை நண்பனாக இருந்தவன்தானே என்று எவ்வளவு பொறுப்பாக அவன் உறவைப்பற்றிச் சிந்திக்கிறாள்!”  வியப்பு குன்றாமல் “என்ன செய்யப் போறே?” என்று கேட்டார். உண்மையிலேயே தன் வட்டத்தை விட்டு வெளிவந்து, பிறர் நோக்கில் பார்த்துப் பழகியிராத அவரால், அவள் செய்யக்கூடியதைக் கணிக்க முடியவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதை தனக்குத் தானே சொல்லிக் கொள்பவள் போல அவள் தொடர்ந்தாள்-“அவன்கிட்ட போய் பேசுவேன். அப்புறம் நான் ஆசையா கட்ன வீட்டை ஏன் இடிச்சேன்னு கேட்பேன். இனிமே அப்டி செய்யக்கூடாதுன்னு சொல்வேன். அவ்ளோதான். அப்புறம் விளையாடுவோம்”.

     என்ன!? இந்தப் பிரச்னையின் முடிவு இத்தனை எளிதானதா? எவ்வளவு சடுதியில் தனக்கு இழைக்கப்பட்டதை மன்னித்து, மறந்து, உறவுக்கு மீண்டும் சந்தர்ப்பம் அளிக்கிறாள்! எத்தனை பரந்த மனம்!  எவ்வளவு துாய்மை இந்த உள்ளத்தில்! தவறு செய்த அவனுக்கு-குற்ற மனப்பான்மையோடு, நட்பைப் பெற முதலடி எடுத்து வைக்கத் தயங்கும் அவனுக்கு-எத்தனைச் சுலபமாகப் பாதை வகுத்துத் தருகிறாள்? அதே நேரத்தில், ஏனிப்படிச் செய்தாய் என்று கேட்கும் துணிவும், இனி இப்படிச் செய்யக்கூடாதென்று அறிவுறுத்தும் திறனும் கொண்டவளாக இருக்கிறாளே! இத்தனைப் பக்குவம் இச்சிறு வயதில் இவளுக்கு எங்கிருந்து வந்தது? தன்னை அறியாமல், “என் பேத்தியல்லவா!” என்ற பெருமிதம் எழுந்தது. அணைத்திருந்த அவரது கை பாசத்தோடு அவளை தன் மடி மீது இருத்திக் கொள்கிறது.

     இவள் செயலுக்குப் பதிலாக அவன் எப்படி நடந்து கொள்வான்? தன்னை நோக்கி வந்த இவளது அன்பின் எதிரொலியாக, இவள் கூறுவதை ஏற்றுக் கொண்டு நட்புக்கரம் நீட்டுவானோ! அந்த நம்பிக்கை இவள் கண்களில் சுடர்விடுகிறதே!  எத்தனை எளிதாக இந்தக் குழந்தைகள் “தான்” என்னும் அகந்தையிலிருந்து விடுபட்டு, உறவுக்கு பாலம் அமைக்கின்றன! இதனால்தான் குழந்தைகள் நடமாடும் தெய்வங்களாக ஒளிவீசுகிறார்களோ!
தெய்வத்தையே அணைப்பது போன்ற பரவசத்தில், பேத்தியை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.

     இத்தனை அறிவுள்ள குழந்தை, “என் தாத்தா” என்று பெருமைகொள்ளத் தக்க வகையில் தான் நடந்துகொண்டிருக்கிறோமா என்ற கேள்வி முதன்முதலாக அவருள் பிறந்தது. வாழ்நாள் முழுதும் தன்னை மையமாகக் கொண்டு பிறர் தன்னை மதிக்கவில்லை, பேசவில்லை, தன் பேச்சைக் கேக்கவில்லை என்று நினைத்தாரே தவிர,  தான் மற்றவர்களை மதித்தோமா, புரிந்து கொண்டோமா, அன்பு காட்டினோமா என்றெல்லாம் யோசித்ததேயில்லை. தன் நடத்தை மற்றவர்களைப் பாதிக்கிறதா என்று சிந்தித்ததில்லை. திறந்த மனதோடு சொந்த மனைவியைக் கூட நெருங்கியதில்லை என்ற உண்மை உறைத்தபோது, அவர் தலை தானே கவிழ்ந்தது.

     உறவுகள் பேணுவதை, அவர்கள்பால் உள்ள தன் கடமையை ஒரு பாரமாய், தன்னை இறுக்கும் விலங்காய் எண்ணி மலைத்ததும், பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள விழையாமல் தன்னை ஒரு வரம்புக்குள் இருத்திக் கொண்டதும் பேதமையாகப் பட்டது. மேடு பள்ளங்களுக்கேற்ப வளைந்து கொடுப்பதல்லவா வாழ்க்கை?  எனக்கு எது இல்லை என்று இப்படித் தனித் தீவாய் வாழ்ந்தேன்?  ஒரு மனிதனுக்கு இன்னும் எதுதான் வேண்டும்? வாழ்வில் குறையோடு இருப்பவர்களெல்லாம் என்னைப்போல் நிறைவாக வாழத் தெரியாதவர்கள்தானோ! பெற்றவரும், உடன்பிறந்தோரும், மனைவியும் மக்களும் சூழ்ந்திருக்கையில் அவர்களோடு சொந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாத நான், கண்காணா தெய்வத்தில் மட்டும் எப்படி இணையப் போகிறேன்?  பூத்த சோலையாய் வாழ்ந்திருக்க வேண்டியவன் வரண்ட பாலையாய் நாட்களைக் கழித்திருக்கிறேனே!

     ஒட்டுதலின்றி விலகியே நின்றாலும், என் சுற்றமனைத்தும் என்னைவிட்டு விலகாது   எப்போதும் காத்து, தங்களோடு பிணைத்து, வாழ்க்கை பிளவுபடாமல் காத்திருக்கிறார்களே இந்தச் செயலுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்?  இது அன்பில்லாவிட்டால் பின் எதுதான் அன்பு? நினைக்க நினைக்க ஆதங்கமும், அதை ஈடுகட்டும் ஆர்வமும் பெருகின. உள்ளத்திலிருந்த கட்டு அறுந்ததும், உலகே புதுமையாகத் தோற்றமளித்தது.  பொங்கி வரும் வெள்ளம்போன்ற உணர்ச்சி, எல்லாவற்றோடும் இணைந்து கரைந்துவிட வேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்தியது. முதன்முறையாக, உள்ளத்தில் ஊறும் அன்பின் சுவையை உணரும் சிலிர்ப்பில், அவர் பேத்தியைப் பார்த்து கண்கள் பளபளக்கச் சிரித்தார். இந்த வயதில் தனக்குப் பாடம் புகட்டிய தன் அருமை ஆசானைத் தழுவி, ஆசையோடு முத்தமிட்டார். அவள் கைகளைப் பற்றியபடி உள்ளம் துள்ள வீட்டை நோக்கி நடக்கலானார். அந்திநேரத்தில் உதயமான அந்த வெண்ணிலா, பூமியைத் தழுவிக் குளிர வைத்தது!

         -- இராசேசுவரி சிமோன்

கவிதை

               ஏக்கம்

கொள்ளைப் புறத்து மரங்களிலே
  கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்க
முல்லைக் கொடியில் மல்லிகைப்பூ
  முத்துப் பல்லை ஒத்திருக்க
கள்ளைக் குடித்த வண்டினங்கள்
  காற்றில் ராகம் இசைத்திருக்க
சொல்லைத் தேனில் கலந்தவளே
  சொக்கிப் போனேன் இவைகண்டு!

காற்றில் வந்த நறுமணத்தில்
  காதல் கலந்து வந்ததடி!
சேற்றில் பூத்த தாமரைப்பூ
  சிவந்த இதழைக் காட்டுதடி!
ஏற்றம் இறைக்கும் ஓசையிலே
  இதயம் ஏக்கம் கொள்ளுதடி!
சீற்றம் ஏன்டி என்மேலே
  சின்னக் கிளியே செங்கனியே!

வட்ட நிலவு வானத்திலே
  வந்த உடனே உன்நினைப்பே
சிட்டு போல பறப்பவளே
  சிந்தை முழுதும் உன்நினைப்பே!
சட்டம் போட்டுச் சண்டைக்கு
  சட்டென தாயின் வீட்டிற்கு
திட்டம் போட்டு போனவளே
  திட்ட மாட்டேன் வந்துவிடு!

முன்னே தெரியும் முகமெல்லாம்
  முத்துப் பெண்ணே உன்முகமாய்
என்னே அழகாய் தெரியுதடி
  ஏங்கிக் கிடக்கும் என்னைப்பார்
கண்ணே மணியே கற்கண்டே
  கட்டி அணைக்க வந்துவிடு
சொன்னேன் கவியில் இனிப்பாக
  சுவைக்க இதழைத் தந்துவிடு!

                    -- அருணா செல்வம்

குடிமைப் பயிற்சி

பிற நாட்டிலிருந்து குடியேறியிருப்பவருக்கான, தேசிய ஒருமைப்பாட்டிற்கான, தேசிய தனித்துவத்திற்கான மற்றும் கூட்டு முன்னேற்றத்திற்கான பிரஞ்சு அமைச்சகத்திலிருந்து “குடிமைப் பயிற்சி” முறையில் வரவேற்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஒப்பந்தம் ஒன்று கடந்த சூலை மாதம் 2009 அன்று வெளியிடப்பட்டது. அனைவருக்கும் பயன்தரக் கூடியவை என்பதால், அதன் விபரங்கள் தமிழில் கொடுக்கப்படுகின்றன.

பிரஞ்சு குடியரசின் நிறுவனங்கள்- -பொது நலன்களையும் மற்றும் பொது சொத்தையும் பாதுகாப்பதற்காகவே இந்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. மக்களாலோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளாலோ அங்கீகரிக்கப்பட்டு மேற்கூறிய நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. 1958 ஆம் ஆண்டிலிருந்து, பிரான்சு தனது 5 ஆம் மக்களாட்சி குடியரசு முறையை அமல்படுத்தியது. இக்குடியரசு முறை 1958 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதியில் இயற்றப்பட்ட அரசியல் அமைப்புக்கு உட்பட்டது.

ஷரத்து 1- -பிரஞ்சு குடியரசு ஒரு பிரிக்கமுடியாத, மத சார்பற்ற, மக்களாட்சி முறையைக் கொண்ட, சமூக நலனையும் கருத்தில் கொண்ட குடியரசு ஆகும். எந்நாட்டவராக இருந்தாலும், எவ்வினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எம்மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சட்டத்தின் முன் எல்லோரும் ஒன்றே என்று உத்திரவாதமளிக்கிறது. எல்லாவிதமான நம்பிக்கைகளையும் அது மதிக்கிறது. இந்நாட்டின் நிர்வாக அமைப்பு பகிர்ந்தளிப்பு முறைக்கு உட்பட்டது.

ஷரத்து 2- -பிரஞ்சு மொழியே பிரான்ஸ் நாட்டின் தேசிய மொழி. நீலம், வெள்ளை, சிவப்பு கொண்ட மூவர்ணக் கொடியே நாட்டின் அடையாளச் சின்னம். தேசிய கீதம்  மர்ஸேயஸ். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதே பிரான்சு குடியரசின் பொன்மொழியாகும். மக்களுக்காக, மக்களே நடத்தும் மக்களின் அரசு என்பதே பிரான்சு நாட்டின் கொள்கையாகும்.

ஷரத்து 3- -பிரதிநிதிகளாலும் மற்றும் கருத்துக்கணிப்பு, வாக்கெடுப்பின் மூலமும் இந்த நாட்டை ஆளும் மக்களுக்கே இந்நாட்டின் அரசுரிமை சொந்தமாகும். எந்த ஒரு தனி மனிதனோ அல்லது எந்த ஒரு தனிப்பட்டி சமூகக் குழுவோ தனியாக அரசுரிமையை இயற்ற முடியாது.

(தொடரும்)

dimanche 13 juin 2010

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம். பிரான்ஸ் கம்பன் கழகம் பெரும் சாதனை ஒன்றை ஓசையிடாமல் செய்திருக்கிறது. கடந்த இரு வருடங்களில், 10,000 க்கும் மேற்பட்ட கம்பராமாயணப் பாடல்களை விளக்கவுரையுடனும், சுவை மிகுந்த பாடல்களின் அழகு நயத்துடனும் ஓதி முடித்திருக்கிறது. இலக்கியச் சுவை காண விரும்பியோரும், பக்திச் சுவையுடன் நெருங்கியோரும் நிறைவு கண்டுள்ளனர்.

குறைந்த அளவில் 35 நபர்களும், மொத்த அளவில் 150 நபர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். நிறைவு விழா சென்ற 22-5-2010 அன்று நடைபெற்றது. பங்கேற்ற அனைவருக்கும்  சான்றிதழ்கள் தரப்பட்டன.  இலக்கியச் சுடர் இராமலிங்கம் அவர்கள், எல்லோருமே உற்சாகத்தோடு  பாடல்களை உரக்கப் படித்ததை மிகவும் பாராட்டினார். ராமபட்டாபி்ஷேகம் பற்றி மட்டுமே அனைவரும் அறிந்திருக்க, இப்படி முற்றும் ஓதியதால், பரதனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டதையும் அறிந்து கொள்ள முடிந்தது என்றும் கூறினார்.

அடுத்து, திருக்குறளை விளக்கத்துடன் ஆய்ந்தறிய கழகம் முடிவு செய்துள்ளது.  நகைச்சுவைத் தென்றல் சண்முக வடிவேல் அவர்கள் உலகப் பொதுமறை பற்றிய விளக்கங்கள் வாழ்வுக்குத் தெளிவு கொடுக்கும் எனக் கூறி, அதன் சிறப்புகள் பற்றி உரையாற்றினார்.

கலந்து கொண்டு பயனடைய விரும்புவோர் கழக உறுப்பினர்களை அணுகி “குறள் அரங்கம்”  பற்றிய விபரங்களைப் பெறலாம்.

முதல் “குறள் அரங்கம்” வருகிற 27-6-2010 அன்று கம்பன் தலைமையகத்தில் நடைபெறும். நன்றி.


இராசேசுவரி சிமோன்

இன்றைய அறிமுகம் -- ழான் தார்க்

பிரான்ஸ் நாட்டின் ஒப்பற்ற வீராங்கனையாகப் போற்றப்படும் ஜான், எளிய விவசாயக் குடும்பத்தில் 1412இல் பிறந்தாள். படிக்காத அந்தப் பெண், தன் தாய் நாட்டைக் காக்கக் கடவுள் தனக்கு ஆணையிட்டிருப்பதாக நம்பி, ராணுவத்தில் சேர முயன்றாள். மக்கள் செல்வாக்கைப் பெற்றுவிட்ட அவளைத் தவிர்க்க இயலாமல் இராணுவத்தில் சேர்த்துக் கொண்டனர்.

17 வயதான அவள், பிரான்ஸ்-இங்கிலாந்து நடுவே 100 ஆண்டுகளுக்கு மேல் (1337-1453) நடந்துகொண்டிருந்த ஐந்து போர்களில், ஆணுடை தரித்து ராணுவம் முழுதும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதிசயத்தக்க வெற்றிகளை அடைந்தாள்.

தலைமைப் பொறுப்பேற்ற அவள் எதிர்கொண்ட பிரச்சனைகள் அதிகம்.
பெண்ணைப் போர்க்களத்தில் ஏற்காத எதிராளிகளும், மதவாதிகளும் உண்டாக்கிய அவப்பெயரைப் போக்க, அவள் தன் கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டியதாயிற்று!

ஜான் பெற்ற வெற்றியினால் அரசனான சார்லஸ் ஏழுக்கு எதிரானவர்கள் அவளை 10,000 பவுண்ட் காசுக்கு அவளுடைய 19ஆவது வயதில், 23-5-1430 இல் இங்கிலாந்து போர்வீரரிடம் பிடித்துக் கொடுத்தனர்.

அரசியல்ரீதியான பகைக்கு, மதத்திற்கு எதிரான கொள்கை உடையவளாக அவளைக் குற்றம்சாட்டி, 1431 மே மாதம் 30ஆம் தேதியன்று இங்கிலாந்து நாட்டின் மத அமைப்பு உயிருடன் அவளை எரித்துக் கொன்றது. அவள் மீது சாட்டப்பட்ட குற்றங்களில் சில-ஆணுடை அணிந்தது, சிறு வயதில் பெற்றோரை விட்டு வந்தது, புனிதர்கள் தனக்கு முன் தோன்றி நாட்டைக் காக்கச் சொன்னதாக தெய்வ நிந்தனை செய்தது போன்றவை.

மே மாத முதல் தேதி ஜான் தார்க்கின் நினைவு நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1456இல் போப் (ஸ்பெயின் நாட்டுக்காரர்) அவளைப் புனிதையாக அறிவித்தார்.

இராசேசுவரி சிமோன்

இலக்கியப் புது வரவும், கம்பனின் மதிப்பீடும்

                              உலகம் உண்மை உணர்தல் வேண்டும்

பொருள்--தமிழர் வரலாறு, ஆசிரியர்--பன்னீர்ச்செல்வம் லுார்துமரியநாதன்,
வெளியீடு--அமுதா பதிப்பகம், புதுச்சேரி-2201684--விலை 75ரூ.

உலகத் தலைமகன் தமிழனே! அவன் மொழியும், நாகரிகமுமே முதன்மை வகித்தவை. இந்த உண்மை தமிழனால் பதிப்பிக்கப்படாததும், ஏனைய நாடுகளால் அறியப்படாததுமாக இருக்கும் அவல நிலையினால் அடைந்த ஆதங்கத்தோடு ஆசிரியர் அவற்றை நிலைநாட்ட போதுமான ஆதாரங்களை அடுக்கியுள்ளார்.

உலகம் உணருமுன் ஒவ்வொரு தமிழனும் அதை உணர்வது எத்துணை அவசியம் என்பதை இப்புத்தகம் நன்கு வலியுறுத்துகிறது.

ராசி சிமோன்

(இங்கு தங்கள் படைப்புக்களை அறிமுகப்படுத்த விரும்புவோர், இரு புத்தகங்களை கம்பன் கழக முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)

சிந்திக்க, செயல்பட

தாமஸ் ஆல்வா எடிசன்--

அடுத்தவர் பாத்திரத்தில் என்ன வெந்து கொண்டிருக்கிறது என்று பார்க்காதீர்கள். உங்கள் பாத்திரத்தில் உள்ளது கருகி தீய்ந்து விடும்.

ஒப்பிட்டு பார்க்காதவரையில் எதிலும் நல்லது கெட்டது என்பதே தெரிவதில்லை.

சில சமயம் முட்டாள்களாக காட்சியளிப்பது கூட அறிவுள்ள செயலே!

யாரோ--

இறைவனிடம் வேண்டும் உதடுகளைவிட, சமயம் பார்த்து உதவிடும் கரங்கள் புனிதமானவை!

பிறர் குற்றங்களில் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால்,
பிறர் நிறைவுகளில் வருத்தம் ஏற்படுவது இயல்பு.

விளக்கு எரிந்தால் எண்ணெய் குறையும். உன் மனம்
எரிந்தால் எண்ணம் தேயும்.

மகிழ்ச்சியைப்போன்ற அழகு சாதனம் வேறெதுவும் இல்லை!