பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 29 avril 2013

இன்றைய அறிமுகம்


மறை(ற)க்கப்பட்ட மாவீரன் மருதநாயகம்.

மருதநாயகம், ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலை போராட்ட வீரன்,தமிழன்.இருந்தும் நம்மவர்களால் மறக்கப்பட்ட,மறைக்கப்பட்ட மாவீரன்,இவரை பற்றி பள்ளிப் பாட புத்தகங்களில் கூட வரலாறு இல்லை எனபது வருத்தத்துக்குரிய செய்தி.

 நமது தமிழக வரலாற்று ஆய்வாளர்களின் முடிவுப்படி (இவரின் பிறந்த ஆண்டு துல்லியமாக தெரியாத காரனத்தினால்) இவர் 1720-திற்கும்1730 திற்கும் இடைப்பட்ட காலகட்டதில் ராமநாதபுரம் மாவட்ட பனையூரில் ஹிந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்து பிறகு இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறியதாகவும் பிறகு மதுரையை ஆண்ட காரணத்தால் மருதநாயகம் என்றும், இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப்,என்றும் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் அறியப்படுகிறார்.

இளமைமுதல் மருத்துவர், தையல் தொழிலாளி, படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திறமைகள் கொண்டு இருந்தாலும் போர்களத்தில் இருந்த ஈடுபாடு காரணமாக தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் சிறிது காலத்துக்கு பணிபுரிந்தது இவரின் முதல் ராணுவ அனுபவம்.பிறகு புதுச்சேரி சென்று பிரெஞ்சுபடையில் சாதாரண ராணுவ வீரனாக சேர்ந்து தன்னுடைய அறிவால்,தலைமைபண்பால்,போர்நுட்பதால் பிரெஞ்சுதளபதிகளின் கவனத்தை கவர்ந்து முக்கிய பதவிகளை  பெற்றார். 

ஔரங்கஜேப் பின் மறைவுக்கு பின் மொகலாய பேரரசு சரியாய் ஆரம்பித்த கால கட்டம், குறிப்பாக தெனிந்தியாவில் கர்நாடக நவாப்,ஹைதராபாத் நிஜாம்,ஆற்காடு நவாப்,போன்ற சிற்றரசுகள் தோன்ற தொடங்கி ஆற்காடு நவாபாக யார்முடிசூட்டி கொள்வது என்ற போட்டியில் ஒரே ரத்த உறவுகளான சாந்தா சாஹிபும்,முஹம்மது அலியும்,முறையே பிரெஞ்சு படை,ஆங்கிலேயப்படையினரின் ஆதரவில் மோதி கொள்ள தொடங்கின.
மருதநாயகம் பங்குகொண்ட பிரெஞ்சுபடையின் உதவியால் ஆரம்பத்தில் பல வெற்றிகளை பெற்றாலும் சிலதுரோகத்தின் காரணமாக 1751 இல் ஆற்காட்டில் நடந்த போரில் வீழ்த்தப்பட்ட சாந்தா சாஹிப் திருச்சியில் நத்தர்ஷா தர்கா அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.

கவனிக்க:: (ஔரங்கஜேப் அவர்கள் பல நவாபுகளை நியமித்தார். நவாப் என்றால் பிரதிநிதி என்று அர்த்தம். இவருக்கு மேல் நிஜாம், நிஜாம் என்றால் அதிபர் என்று அர்த்தம். ஹைதராபாத் நிஜாமின் கீழ்தான் கர்நாடக நவாபும், ஆற்காடு நவாபும் செயல்பட்டனர்.)

ஆற்காட்டை தலைநகராக கொண்டு வேலூரில் இயங்கிய ஆற்காட்டுநவாபின் அரசு எல்லாவகையிலும் முதன்மையாக இருந்ததால் இவர்களிடம் அனுமதி பெற்றுதான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேய வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.  ஆற்காட்டு போரின் தோல்விக்குப்பின் பிரெஞ்ச்காரர்களின்  செல்வாக்கு தமிழகத்தில் குறைந்ததால் அவர்கள் புதுவை,காரைக்காலுடன் தங்களின் ஆதிக்கத்தை நிறுத்திக்கொண்டனர்.மேலும் பிரெஞ்ச்தளபதிகளுடன் மருதநாயகத்துக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணத்தால் மருதநாயகம் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார். தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர்.

 விதியின் வசத்தால் அப்போது மருதநாயகம் ஆங்கிலேயர் சார்பாக ஒரு போரை சந்தித்தார் எதிர்அணியில் இருந்தவர் மைசூர் சிங்கம்  ஹைதர் அலி.(தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகமும் பின்னணி என்பது உண்மை).ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிலேயர்கள் பூரித்தனர்.

திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.

1752ல்(இன்றைய) கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது.மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர்.

மதுரையில் இருக்கும் கான்சா மேட்டுத் தெரு, கான்சாபுரம், கான்பாளையம் போன்ற பகுதிகள் அவர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் கூமாப்பட்டிக்கு அருகே உள்ள கான்சாஹிபுரம், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மற்றும் தேனி மாவட்டம் பெரிய குளம் அருகிலுள்ள கான்சாஹிப்புரம் அல்லது மம்சாபுரம் ஆகியன,மற்றும் இன்று பரபரப்பாக பேசப்படும் பெரியாறு அணைக்கட்டிலிருந்து, பாசன நீரை மதுரைக்கு கொண்டு வர அன்றைக்கு திட்டமிட்டவர் இவர்தான். வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில், அணைக்கட்டு ஒன்றை கட்டினார். திருநெல்வேலியில் உள்ளமேட்டுக் கால்வாய் திட்டத்தை உருவாக்கி அதை வடிவமைத்தார்.

இவரது ஆட்சிக் காலத்தில்தான் வட இந்தியாவிலிருந்து சௌராஷ்டிர மக்கள் அதிகமாக மதுரைக்கு வருகை தந்தனர். அவர்களின் உழைப்புக்கு உறுதுணையாக திட்டங்களை வகுத்து நிதியுதவியும் செய்தார். இதனால் உழவுத்தொழிலுடன், நெசவுத்தொழிலும் செழித்தது.நவீன இயந்திரங்கள் இல்லாத அக்காலத்தில் கொடைக்கானல் மலையடிவார பாதைகளை சிறப்பாக அமைத்து முதலில் சாலை அமைக்கப்பட்டது மருதநாயத்தின் ஆட்சியில்தான்.அப்போது சிறப்பாக செயல்பட்ட தொண்டி துறைமுகத்தையும், தூத்துக்குடி துறைமுகத்தையும் மதுரையுடன் இணைக்கும் வகையில் தேசிய வர்த்தக சாலைகளை உருவாக்கினார். மேலும்  திருநெல்வேலி, கம்பம் போன்ற தொலைதூர ஊர்களுக்கும் மதுரையிலிருந்து எளிதாக செல்ல சாலைகளை அமைத்தார்.

இதைப்பற்றி கர்னல் வில்லியம் புல்லர்டன் என்ற ஆங்கிலேயர்(“A VIEW OF THE ENGLISH INTERESTS IN INDIA”) என்ற தன்னுடைய நூலில் “மருதநாயகத்தின் ஆட்சியின் கீழ் நிர்வாகம் மிகவும் சுறுசுறுப்பாகவும், பலன் தரத்தக்கதாகவும் செயல்பட்டது. அவரது நீதி சார்பற்று இருந்தது. அவரது செயல்பாடுகளை,நடவடிக்கைகளை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்று பின்பற்றினார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

ஏற்கனவே மருதநாயகம் தெற்கு சீமையின் கவர்னராக நியமிக்கப்பட்டதில் இருந்து பொறாமையில் இருந்த ஆற்காட்டு நவாபினால் சிறந்த நிர்வாகத்தினால் மருதநாயகம் அடைந்து வந்த புகழையும் ஜீரணிக்க இயலவில்லை.இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது.(இன்று ஆற்காடு இளவரசராக சென்னையில் வலம் வரும் இளவரசர் முகம்மது அலியின் முன்னோர்கள்தான் ஆற்காடு நவாபினர்). திருச்சி பகுதியில் மருதநாயகம் கப்பம் வசூலிக்க தடை என ஆற்காடு நவாப் கூற எதிர்த்து ஆங்கிலேயர்களிடம் முறையிட்டார் மருதநாயகம் முறையிட பிரச்சனையை சுமூகமாக தீர்க்க விரும்பிய ஆங்கிலேயர்கள், மருதநாயகத்திடம் திருச்சிதானே..போனால் போகட்டும் உனக்கு மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் கப்பம் வசூலிக்கும் உரிமையை தருகிறோம் என்றனர்.

அடுத்த கட்டமாக ஆற்காடு நவாப், வரவு & செலவுகளை மருதநாயகம் ஒழுங்காக சமர்ப்பதில்லை என்றும், தன்னை நலன் விசாரிக்க வந்த மருதநாயகத்தை, “என்னை கொல்ல சதி செய்தார்” என்று அதிரடியாக புகார் கூறினார். இப்படி மருதநாயகதுக்கும்,ஆற்காட்டு நவாபுக்கும்,இடையே ஏற்பட்ட பனிப்போரில் குளிர் காய்ந்த ஆங்கிலேயர் ஆற்காட்டு நவாபுக்கு ஆதரவான நிலை எடுக்க, ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கிய  மருதநாயகம்! நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-? இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் தூண்டியது!

மருதநாயகத்துக்கு கோபம் பீறிட்டது, கொதித்து எழுந்தார். தன் ஆற்றலையும், தியாகங்களையும் மறந்து விட்டு ஆங்கிலேயர்கள் நடந்து கொண்டதை அவரால் பொறுக்க முடியவில்லை. விளைவு????அடுத்த பகுதியில் நிறைவுறும்.

அப்துல் தயுப்.








mercredi 27 mars 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                          

அன்புடையீர்,

வணக்கம். சென்ற வலைப்பூவின் தொடர்ச்சியான எண்ணக் குவியல் என இதைக் கொள்ளலாம். ஏனெனில் எந்தக் கருத்துமே அடுத்தக் கோணத்தைக் கொண்டதாகவே உள்ளது. அதிலும் சமூகப் பிரச்சனைகள் என்னும்போது, ஒன்றின் எதிரொலியாகவோ, விளைவாகவோ, அன்றி இயற்கையின் விபரீத விளையாட்டாகவோ சில வரம்பு மீறிய, சீரணிக்கச் சற்றுக் கடினமானக் காரியங்கள் நடந்து விடுகின்றன! அவை எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். எனினும் மறைக்கப்படவோ அல்லது மறுக்கப்படவோ கூடாததான உண்மைகள் அவை. 

'கடந்த காலத்தை விட இப்போது குற்றங்கள் மலிந்து விட்டன' என்பது  என்றும் மாறாத சொற்றொடராக விளங்கி வருகிறது. ஒன்று அவற்றைப் புரியும் இக்கட்டில் மனிதர்களைத் தள்ளும் சூழலைச் சமூகம் வளர்த்து வருகிறது என்று கொள்ள வேண்டும். அல்லது ஒட்டு மொத்த சமுதாயமும் நன்மை-தீமை பாகுபாட்டிற்கு அப்பாலான வாழ்க்கையை நடத்தி வருவதாகக் கொள்ள வேண்டும். உலகம் கைக்குள்ளாகச் சுருங்கி விட்ட இந்நாளில், அறிவின் தாக்கமும், விதி விலக்கான வேண்டாத செய்திகளின் பரவலும், புது முறை விளக்கங்களும், அதை எந்த அளவுக்கு ஏற்கிறோமோ அந்த அளவு புதுமையின் முன்னணியில் இருக்கிறோம் என்னும் மாயையும் மனிதர்களை அலைக்கழிக்கின்றன. சில கட்டுப்பாடுகளும், தன்னடக்கமும், நெறிமுறைகளும் தேவையற்ற அறிவுரைகளாகி விடுகின்றன.

மனிதன்  என்றுமே நல்லவற்றுக்கும் அல்லாதவற்றுக்கும் இடையே ஊசலாடிக்கொண்டு தான், தனக்கானப்  பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது . சீரிய வழியில் செல்ல மனசாட்சியும், நற்போதனைகளும் துணை செய்கின்றன. காலங்காலமாய் சொல்லப்பட்டவை என்பதாலேயே அவை சாரமிழந்து போய்விடுவதில்லை! அறிவின் துணை கொண்டு மாற்று தேடின், அவை இன்னும் மனிதத்தைப் புனிதமாக்க வேண்டும்.

தரந்தாழ்ந்தவைகளை நாலு பேர் மத்தியில் பேசக் கூடாது என்பது நாகரிகத்தால் விளைந்த ஓர்  ஒழுங்கு முறை. ஆணோ, பெண்ணோ தன் உடலழகை  கடை விரித்தல் அழகல்ல என்பது உச்சகட்ட தன்னடக்கம். தனக்குள்ள சுதந்திரம் பிறர் உரிமைக்குள் தலையிடாதவரையில்தான் என்றுணர்வது தலையாய மனித நேயம். ஆனால் தனி மனித மனச்சான்றும், அதைத் தூக்கி நிறுத்தும் கட்டுக்கோப்பும் நாளுக்கு நாள் தளர்ந்து வருகிறது. ஊடகங்கள்  மனிதனின் அந்தரங்கத்தில் இருள் அரக்கனை உலவவிடுகின்றன.சாமான்யன் தன் பலமிழந்த சமயத்தில் அவன் தன்னை ஆளும்படி விட்டுவிடுகிறான். அவனை வெற்றி கொள்வதுதான் தன் மனிதப் பிறவிக்கான சவால் என்பது அடிபட்டுப் போகிறது.

 வயதோ, இனமோ, உறவோ இன்றி மிருக உணர்வும், அதற்கான தேடலும், அதில் வெற்றி பெரும் வேட்கையும் தான் முன்னிற்கின்றன. இதில்  வெட்கத்திற்குரிய வேதனை என்னவென்றால் இவ்வன்முறைச் சம்பவங்கள் கூட்டு முறையில் அரங்கேற்றப்படுவது. தனிப்பட்ட ஒரு நபரையாவது, ஆயிரம் காரணம் காட்டி நியாயப்படுத்தவே முடியாத இத்தகு செயலுக்காக, புரிந்து கொள்ள?! வேண்டலாம். (மன தத்துவ மருத்துவர்களும், வக்கீல்களும் இதைத்தான் செய்கிறார்கள்). ஆனால் மனசாட்சிக்கு இடமே அளிக்காத ஒருமித்த சதியினை, பரிதாபத்துக்குரிய ஓருயிர் மீது நடத்தப்படும் அராஜகத்தினை சமூகம் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்? எந்த நோக்கத்திற்காக அது மவுனம் சாதிக்கிறது? எதனால் துணிந்து இந்நபர்கள் மீது தன் பலத்தை உபயோகித்து அவர்களை அடக்க முன்வரவில்லை?

இதற்கு ஒரே காரணம்தான் தென்படுகிறது: ஆழ்ந்த சமூக நலன் காக்கும் பண்பு குறைந்து விட்டது. தீமை களையும் உறுதியோடு அரசாங்கமோ, அதிகாரிகளோ செயல்படுவதில்லை. கடுமையான தண்டனை உண்டு என்பது  நிச்சயமானால், தன்  உணர்வுகளைக் கட்டுப்படுத்த நினையாதவன் கூட அதற்கு பயந்து தயங்குவான். இதற்கு கற்பு குறித்தான சமூக எண்ணங்கள் மாற வேண்டும். திருட்டு, கொலை, கொள்ளைகளை விடவும் ஒருவரது தனிப்பட்ட அந்தரங்கத்தில் தலையிடுவது மகத்தானக் குற்றம் என்பதை எல்லோருமே உணர வேண்டும்.

இயற்கையைக் கெடுத்து, அதன் விளைவுகளை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறோம். மனிதப்பண்புகளை ஒவ்வொன்றாக இழந்து வருகிறோம். இயற்கைத் தடம் புரண்டு, சீற்றம் கொள்வதைத் தாங்க இயலாதது போலவே பண்புக் கொலையும் மனித இனத்தின் அழிவாக மாறுமுன் விழித்துக் கொள்வது நல்லது.

திருமதி சிமோன்


நாணயத்தின் மறுபக்கம்

                                                             

காலங்காலமாய் பாலியல் வல்லுறவு என்னும் கொடுமையை பெண்களும், குழந்தைகளும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. தனித்து எங்கேனும் விடப்பட்டால் ஏதேனும் நடந்து விடுமோ என்ற பயம் பெற்றோர்களுக்கும், உலக நடப்பு அறிந்தவர்களுக்கும் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை. அந்த அளவு சுதந்திரமில்லாத, பண்பில்லாத சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இதே கொடுமைகள் ஆண்களுக்கும் நிகழ்கின்றன என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்தாலும், நிச்சயம் கவலைக்குரியதே! மனதாலும், உடலாலும் அதே பாதிப்பு என்னும்போது முளையிலேயே கிள்ள வேண்டிய ஒன்றே!

பெரும்பாலும் இந்நிகழ்ச்சிகள் கோபம், மேலாதிக்கக் கொடூரம், அடிமைப்படுத்தும் எண்ணம், கூடவே சிறிது பாலுணர்வு ஆகியவற்றால் நிகழ்கின்றன என்கிறார்கள். பெண்ணளவு  ஆண்கள் எதிர்ப்பு காட்டா நிகழ்வுகள், அவர்களது உணர்வுகள் உறைந்து போவதை எடுத்துக் காட்டுகின்றன. தங்களால் கட்டுப்படுத்த இயலாத இயற்கை உடலமைப்பும் ஒரு காரணமாகலாம். 40 சதவீதம் இயல்பு வாழ்க்கை வாழ்பவர்களால் இக்கொடுமை நடத்தப்படுகிறது என்னும்போது நாம் எங்கே போகிறோம்?! இந்த பாதிப்புகளை நிரூபிப்பது சிரமம். பெரும்பாலோர் இத்தகு நிலையை வெளியில் கூற முன்வருவதில்லை. தங்கள் ஆண்மைக்கான தலைக்குனிவு என்று கருதுகிறார்கள். சமூகப் பரிதாபமும், உதவியும் கிடைப்பதும் சற்று சிரமம்.

2009 இல் ஜெர்மன் மொழி பேசும் சுவிஸ் சுரிஷ் நகரில், மன அழுத்தங்கள், உடல், உள ரீதியான துன்புறுத்தல்கள் காரணமாக பாதிக்கப்படும் ஆண்களுக்காக ஓர் அமைப்பு ஆரம்பிக்கப் பட்டது.

Men's Movement என்பது திருமணம், குழந்தை தொடர்பான உரிமை பற்றி ஆண்களுக்காக நடத்தப்படுகிறது. இது பெண்ணியக் கொள்கைக்கு எதிரானதல்ல.

உடல் வன்முறை உரிமை பற்றிய இந்தியக் குற்றவியல் சட்டம் (திருத்தியமைப்பு) மசோதா 2010 இன்னும் கருத்தில் கொள்ள வேண்டிய உண்மைகள் பல உள்ளன.

ஒரு தவறுக்கு தண்டனை அளிக்கலாம். ஆனால் தவறே நடக்கா வண்ணம் வாழ முயல்வதே மனிதப் பிறவிக்கழகு. மீண்டும் கற்காலத்தை நோக்கித் திரும்பும் போக்கினை மாற்றி, மனிதத்தை வளர்ப்பது பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் சமூகத்திற்காற்ற வேண்டியக் கடமை!

திருமதி சிமோன் 




இன்றைய அறிமுகம்

                                                          
ஔரங்கஜேப்


ஔரங்கஜேப், வரலாற்றில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மிக சரியான நபர் என்று நடுநிலையாக வரலாற்றை எழுதியவர்களால் பாராட்டப்படுபவர். இந்தியாவை ஆண்ட மன்னர்களில் இவரை பற்றி மட்டுமே ஆயிரக்கணக்கில் ஆராய்ச்சி கட்டுரைகளும் நூற்றுக்கணக்கில் நூல்களும் பல வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்டு இருந்தாலும் இவரை பற்றி எந்த ஒரு தீர்க்கமான முடிவுக்கும் இது வரையிலும் யாராலும் வர முடியவில்லை என்பதே உண்மை.

ஜோசப் கோயபல்சின், ஒருபொய்யை திரும்பதிரும்ப சொன்னால் அது மெய் ஆகிவிடுகிறது என்ற தத்துவத்தின்படி பிற மதத்தின் சுதந்திரத்தை பாதுகாத்தல் மன்னரின் கடமை என்று இருந்தவரை,ஹிந்துக்களின் பகைவர் என்று தங்களின் தயவை எதிர்பார்க்கும் இந்தியர்களை வைத்து அப்போது நம்மை ஆண்ட வெள்ளையர்கள் வரலாறை எழுதினர் அதில் வெற்றியும் கண்டனர்.

ஔரங்க என்பதற்கு அரசுசிம்மாசனம்,ஜேப் என்பதற்கு அழகு என்றும் (பார்சீய மொழியில்)பொருள்படும் பெயரை கூட ஔரங்கசீப் என மாற்றியவர்கள் எழுதிய வரலாறு தான் நாம் பள்ளிகூடங்களில் படித்தது.

அக்டோபர் 24,1618 மன்னர் ஷாஜகானுக்கும்,மும்தாஜுக்கும் 6வது குழந்தையாக பிறந்தவர்.தாரா,ஷுஜா,ஔரங்கஜேப்,முராத் என நான்கு மகன்கள் இருந்தாலும் தந்தையால் ஔரங்கஜேப், 16 வது முதலே 10000 வீரர்கள் அடங்கிய குதிரை படைக்கு தளபதியாக நியமிக்கப்பட்டவர் வாழ்வின் இறுதி வரை (வயது 91)போர்களத்திலே இருந்தார்.மாறாக பிற சகோதரர்கள் தந்தை ஷாஜஹானின் அன்பு அரவணைப்பில் சொகுசாக அரண்மனை வாசம் புரிந்தனர், அவர்கள் பேருக்கு சில போர்களில் பங்கு கொண்டாலும் வெற்றி அடையவில்லை எனபது தனி வரலாறு.

ஆனால் இவர் (1636-1644)ல் தெற்கே தக்காணத்தின் கவர்னர்,அப்போது தந்தையின் ஏற்பாட்டில் 18 மே 1637 இல் பாரசீக அரசகுடியின் உறுப்பினர் ஷானவாசின் மகள் தில்ராஸ் பானு பேகம் என்னும் பெண்ணை மணம்முடித்தார்.1645 இல் குஜராத்தின் கவர்னராகவும்,1648 முதல் 1652 வரை முல்தானின் கவர்னராகவும் பதவி வகித்தார்.1652 முதல் 1657-58 வரை மீண்டும் தக்காணத்தில் கவர்னராக இருந்தார்.1658 ஜூலை 31 ல் (  சிலர் 21 என்கின்றனர்)வாணவேடிக்கை,ஆடம்பரம் என இல்லாமல் மிகமிக எளிமையாக முடிசூட்டிகொண்டார்.

மொகலாய மன்னர்களிலேயே மது,மாது(4 மனைவிகள் மட்டுமே,அரசர்களுக்கே உரித்தான அந்தபுர அழகிகளுக்கு தடை) பழக்கம் இல்லாதவர். தனிமனித ஒழுக்கத்தில் இவரை போல ஒழுக்கமானவரை பார்ப்பது கடினம்.நேர்மையும் கண்டிப்பும் கொண்ட மிகசிறந்த நிர்வாகி என்று (வைஸ்ராயாக தெற்கு பகுதியை ஆண்டபோது) பெயர்பெற்றபோது வயது 18 மட்டுமே, என்றால் இவரின் நிர்வாக திறமையை புரிந்து கொள்ளலாம்.

மன்னராக தந்தையே என்றாலும் தவறை சுட்டிக்காட்ட தவறவில்லை.ஷாஜஹானின் வீண் ஆடம்பரமான தனிமனித வாழ்க்கை குறித்து இவர், தந்தையும்,மன்னருமான ஷாஜஹானுக்கு எழுதிய கடிதத்தில்  ஓநாயாக பிறந்து விட்டு ஆடு மேய்க்கும் வேலை பார்க்க கூடாது,மன்னரின் கடமை குடிமக்களை சிறந்தமுறையில் பாதுகாப்பது,அதை விட்டு உல்லாசமாக வாழ்வதிலும்,கேளிக்கைகளில் ஆர்வம் காட்டுவதும் அல்ல, என்று குறிப்பிட்டு இருந்தார்.

போர்களத்தில் பிரார்த்தனை:

1647 ல் தந்தையின் கட்டளை ஏற்று 25,000 வீரர்களுடன் படாக்ஷான்  (ஆப்கானிஸ்தான் )சென்ற ஔரங்கஜேப், அங்கு முகாமிட்டு இருந்த அல்பேனியர்களை அர்பான்க் என்னுமிடத்தில் தாக்கி விரட்டி அடித்தார் .ஆனால் பால்க் பகுதியில் வலிமையாக மோதிய  10,00,000 உஸ்பெக்கியர்களை எளிதில் எதிர் கொள்ள முடியவில்லை கடுமையான போர் நடந்து கொண்டு இருந்த வேளையில் தொழுகை நேரம் வந்ததை அறிந்த ஔரங்கஜேப், குதிரையில் இருந்து இறங்கி வந்து அமைதியாக தொழுகை புரிய ஆரம்பித்ததை கண்ட உஸ் பெக்கியர்கள் இத்துணை ஆன்மீக பலம் கொண்டவருடன் போரிடுவது நாமே நம் அழிவை வரவேற்பதாகும் என்று கூறி போரை கைவிட்டு திரும்பி சென்றனர் என்பது பல வரலாற்று ஆசிரியர்கள் உறுதி படுத்தும் செய்தி ஆகும்.

ஔரங்கஜேப் இன் ஆட்சி காலத்தில் மொகலாய பேரரசு தமிழகத்தில் செஞ்சி, நஸ்ரத் கட்டாஹ் (Nasrat Gaddah)என்று பெயர் மாற்றப்பட்டு மொகலாயரின் வெற்றிக்கு பாடுபட்ட ராஜபுத்திர தளபதியான சௌரூப்சிங்கிற்கு (இவர் ராஜா தேசிங்கின் தந்தை ஆவர்) ஔரங்கஜேப்  உத்தரவின்படி 18-1-1700 இல் அளிக்கப்பட்டது.அவரும் மொகலாயரின் அதிகாரத்திற்கு உட்பட்டுசெஞ்சிகோட்டையுடன்,திண்டிவனம்,வழுதாவூர்,திருகோவிலூர்,மஞ்சகுப்பம்,திருப்பாப்புலியூர், வேட்டைவனம் போன்ற பகுதிகளையும் ஆண்டு வந்தார்.

ஆலம்கீர் நாமா என்ற ஔரங்கஜேப்பின் சரிதையை சொல்கிற நூலை எழுதிய ஆசிரியர் கூறுகிறார் 24 மணி நேரத்தில் வெறும் 3 மணி நேரம் மட்டுமே தூங்கி ஓய்வு எடுத்தார், ஔரங்கஜேப். கி.பி.1640 முதல் 1667 வரை இந்தியாவில் சுற்றுபிரயானம் செய்த தவேர்நியர் எழுதிய நூலில் ஔரங்கஜேப் மாமிச உணவு உண்ணாதவர் என குறிப்பிடுகிறார்.(No animal food passed hi slips) Fean Baptiste Tavernier, Travels in india, Translated by V.Ball,London,1889,Vol.1,Page 338.

லேன்பூல் என்ற சரித்திர ஆசிரியர் குறிப்பிடுகிறார், …for besides this he slept on the ground,with only a tiger's skin over him. ஔரங்கஜேப் தரையில் படுத்து இருப்பார், புலிதோலை தனது மேலே போர்த்தி இருப்பார்.

முஸ்லிம்கள் யாராயினும் வாழ்வில் ஏதாவது ஒரு தொழில் செய்து வாழ வேண்டும் என்ற அண்ணல் நபி (ஸல்)அவர்களின் போதனைபடி ஔரங்கஜேப் தானே தொப்பிகள் தயாரித்தார்,திருக்குரானை மனனம் செய்திருந்த அவர் தனது கரங்களால் பிரதிகள் எடுத்து இவைகளின் மூலம் கிடைத்த வருவாயை தனது செலவுகளுக்காக செலவழித்தார்.இஸ்லாம் மார்க்கத்தில் தடை செய்யப்பட ஆடம்பர ஆடைகளை ஔரங்கஜேப் அணிந்ததில்லை,தங்கம்,வெள்ளி  பாத்திரங்களை தனது சொந்த தேவைகளுக்காக உபயோகித்ததில்லை,என்று bernier ,கால்பர்ட் (Monseigneur Colbert)என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

நோய்வாய்பட்டுஇருந்த நண்பர் கான் பெரோஸ் ஜங் (Khan Feroz Jang) என்பவருக்கு ஔரங்கஜேப், எழுதிய கடிதத்தில் நோய்வாய்பட்டு இருக்கும் தங்களை சந்திக்க எனக்கு துணிவு இல்லை,எனவே எனது கண்களை வைத்து பார்பதற்கு சதாத் கானை அங்கு அனுப்பிஉள்ளேன்,தங்கள் பூரண குணமடைந்து நல்ல நிலைக்கு வரும்வரை எந்தவித பழங்களையும் நான் சாப்பிடமாட்டேன் என்று குறிப்பிடுகிறார்.

பாரசீகர்கள் நௌரொஜ் (Nouroz)என்னும் புத்தாண்டு விழாவை மார்ச் 21 இல் கொண்டாடுவது வழக்கம்,அப்போது மன்னரின் எடைக்கு எடை பொன்,வெள்ளி,பொருள்களை பரிசாக பெற்று வந்தனர்,இது அக்பர் காலத்தில் இருந்து வழக்கத்தில் இருந்து வந்த பழக்கம்.வீண் ஆடம்பரங்களை வெறுத்து ஓதுக்கிய ஔரங்கஜேப் தனது ஆட்சி காலத்தில் இதை நிறுத்தினார் விளைவு, ஆண்டு தோறும் பொன்னையும் பொருளையும் கொண்டுபோய் அனுபவித்து வந்த கூட்டத்தினர் வீண்பழிகளை தூற்றினர். அதே போல கஞ்சா ,அபின்,போன்ற போதை வஸ்துகள் இவரின் ஆட்சி காலத்தில் தடைசெய்யப்பட்டதால்  சில பைராகி களும், மததுறவிகளும், கஞ்சா புகைப்பதும்,அபின் அருந்துவதும்,தங்களது வழிபாட்டு முறைக்கான அனுமதிக்கப்பட்ட செயல்கள் என்று கூறி ஔரங்கஜேப் அதை தடை செய்து விட்டதால் மத விரோதி போல சித்தரிக்க தொடக்கி விட்டனர்.

ஒருமுறை புனித மக்கா நகரின் ஷெரிப் பொருளுதவி வேண்டி தனது தூதரை ஔரங்கஜேப்பிடம் அனுப்பி வைக்க ஔரங்கஜேப் அவருக்கு பொருளுதவி செய்ய மறுத்ததோடு எனது தேசத்தில் (இந்தியாவில்)உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்த பணத்தை விநியோகிக்க கூடாதா ? என்று கேட்டு இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று தூதரிடம் சொல்லி அனுப்பியவர் ஔரங்கஜேப்.

அது வரை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட நாணயங்களில் இருந்த இஸ்லாமிய மதகோட்பாட்டை (வணக்கத்துக்குரியவன் இறைவனை தவிர வேறு யாரும் இல்லை,நபிகள் நாயகம்(ஸல்)இறைவனின் இறுதி தூதராவார்கள்) நாணயங்களில் பொறிக்கும் வழக்கத்தை கைவிட்டவர், ஔரங்கஜேப்.

ஔரங்கஜேப்பிடம் சில முஸ்லிம் நண்பர்கள்,சென்று உயர் பதவி வகிக்கும் இரு மாற்றுமத நபர்களை அவர்கள் முஸ்லிம் இல்லாதகாரணத்தால் பதவி விலக்கும்படி கூற அதற்கு அரசியலுக்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை,அவரவர் அவரவர் மதத்தை பின்பற்றட்டும் என கூறியவர் ஔரங்கஜேப் ,மேலும்  ஔரங்கஜேப் பதவிக்கு வரும்போது அரசில் மன்சப்தாராக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை 21.6 சதவீதம் மட்டுமே,இவரின் ஆட்சியில் இவர்களின் எண்ணிக்கை 31.6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.(மொகலாய பேரரசில் மன்சப்தார்கள் ஆளும் குழுவினராக இருந்தவர்கள்)சூரத் நகரில் சில காலம் தங்கி இருந்த காப்டன் அலெக்ஸ்சாந்தர் தமது நூலில் ஔரங்கஜேப்பின் ஆட்சியில் பாரசீகர்கள்,கிறிஸ்துவர்கள்,ஹிந்துகள் ஆகிய யாவரும் தங்களது மத கடமைகளை ஒழுங்காக ஆற்ற முடிந்தது என்று குறிப்பிடுகிறார்.Caption Alexander Hamilton,A New Account of the East Indies,Vol,1,Page,159,162 and 163.

தன்னுடைய இறுதி ஊர்வலத்தை கூட மிக ஆடம்பரமான  முறையில் ஏற்பாடு செய்து வழியெங்கும் தங்க,வெள்ளி நாணயங்கள் அள்ளி இறைக்கப்படவேண்டுமேன்று மரண சாசனம் எழுதிய ஷாஜஹானை போல அல்லாமல் ஔரங்கஜேப் எழுதிய இறுதி உயில் ஒன்று போதும் இவரை பற்றி அறிய:

தம்மால் செய்யப்பட்ட குல்லாக்கள் விற்றபணம் நான்கு ருபாய் இரண்டு அணாவை கொண்டு கபன் எனப்படும்,இறந்த உடலை மூடும் துணியை வாங்க வேண்டும் என்றும்,திருக்குரான் எழுதிய வகையில் தமக்கு கிடைத்த 350 ரூபாய்களை சாலிஹான ஏழைகளுக்கு தானம் செய்யவேண்டும் என்றும்,தனது சமாதியின் மேல் எந்தவிதமான கட்டிடமோ,அல்லது நினைவு ஸ்தூபியோ கட்டகூடாது என்று எழுது பூர்வமாக ஆணை இட்டார் என்று இவரின் சரிதம் எழுதிய ஜாதுநாத் சர்க்கார் குறிப்பிடுகிறார். 13 நாட்கள் நோய்வாய்பட்ட நிலையில் 21 பெப்ரவரி 1707 ல் அஹமத் நகரில் இருக்கும் போது இப்புவி வாழ்வை துறந்தார் ஔரங்கஜேப்.

50 ஆண்டுகள் 2 மாதங்கள் 27 நாட்கள் இந்தியாவின் பெரும் பகுதியை அரசாட்சி புரிந்த ஔரங்கஜேப் இன் உடல் தௌலதபாத் அருகில் குல்தாபாதில் ஔரங்காபாதிற்கு சமீபத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அப்துல் தயுப்.

அறிவு

                                                         




நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்நாள் முழுவதும் தேடுகின்ற செல்வம், மனைவி, மக்கள், வீடு, நிலம், வாகனம், ஆடை ஆபரணங்கள் முதலியன எல்லாம் இந்த உடம்பை விட்டுப்புறப்படும்போது உடன் வருவதில்லை. நம்மைத் தொடர்ந்து நம்முடன் வருவது "அறிவு" ஒன்றே ஆகும். அந்த அறிவு நாம் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் அத்தனைப் பிறவிகளிலும் தொடர்ந்து வரும். ஆகவே மற்ற பொருள்களைத் தேடுவதோடு அறிவை ஆர்வத்தோடு தேடிப் பெறுதல் மிகவும் அவசியம்.


நாம் இயற்கையில் பெற்ற அறிவோடு பல வழிகளிலும் அறிவினைப் பெறுகின்றோம். பலவற்றைக் கண்களால் பார்த்தும் பலர் சொல்லக் காதுகளால் கேட்டும் நாவினால் சுவைத்தும் மூக்கால் மோந்தும் கை கால் உடலினால் தொட்டும் அறிந்து கொள்கிறோம். ஒரு குழந்தை எரிகின்ற அடுப்பில் நெருப்பைப் பார்த்து ஆசையுடன் அருகில் சென்று நெருப்பில் கையை வைத்தவுடன் அலறி அழுகின்றது. "நெருப்பு சுடும்" என்பதை அந்தக் குழந்தை நேரிடையாகப் பட்டு அறிந்து கொள்கிறது. இது அந்தக் குழந்தைக்கு 'நேர்முகப் பட்டறிவு'. அந்தக் குழந்தையின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற குழந்தை தானும் அவ்வாறு செய்து பார்த்துத்தான் அறிந்துகொள்வேன் என்று நெருப்பில் கைவைப்பதில்லை. அந்தக் குழந்தைக்கு அது 'மறைமுகப் பட்டறிவு'. இதுபோன்று நேர்முகமாகவும் மறைமுகமாகவும் அனுபவித்து அறிந்து கொள்ளும் பட்டறிவுடன் அவரவர் கற்கும கல்வியால் பெறும் அறிவும் சேர்கின்றது. இப்படிச் சேர்த்த அறிவினைக் கொண்டு ஒவ்வொருவரும் தத்தமக் குரிய ஆற்றலுக்கு அமைந்தவாறு தமதாக்கிக் கொண்ட உண்மை அறிவே வாழ்நாள் முழுவதும் பயன்படுகின்றது.


நல்லனவற்றை நாடி ஆய்ந்தறியவும், தீயனவற்றைத் தேடித் தொலைத்திடவும் அறிவே துணைபுரிகின்றது. செய்யத் தகுந்தவைகளைச் செய்விக்கின்றது. செய்யத் தகாதவைகளைச் செய்யாமல் தடுக்கின்றது குற்றங்களைக் கடிகின்றது. நீதியை நிலைநாட்டுகின்றது. தாம் வாழ்வதோடு பிறரை வாழவிடவும் மற்றவர் வாழ்வதற்குத் துணை புரியவும் இயன்றவரை சிலரையாவது வாழவைக்கவும் உதவி செய்கின்றது. வன்சொல் நீக்கி இன்சொல் பேசவைத்து மனித நேயத்தை வளர்க்கின்றது. துயரப் படுவோர்க்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லச் செய்கின்றது. யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பி ஏமாறாமல் அதன் உண்மையை ஆராயந்து அறிந்து எச்சரிக்கின்றது. எந்தப் பயனையும் எதிர்பார்க்காமல் மற்றவர் துன்பத்தைத் தனக்கு வந்ததாக நினைக்கச் செய்து தக்க சமயத்தில் அவர்கள் கேட்காமலேயே சென்று உதவச் செய்கின்றது தவறு செய்கின்ற நண்பர்களை இடித்துரைத்து நல்வழிப் படுத்துகின்றது. நற்குண நற்செயல்களால் சமுதாயத்தில் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தருகின்றது. துன்பம் நேரும் காலத்தில் தம்மைக் காத்துக் கொள்ள உதவுகின்றது. மனம் போன போக்கில் போகவிடாமல் தீமையிலிருந்து நீக்கி நல்வழியில் செலுத்திக் காக்கின்றது. சுருங்கச் சொன்னால் அறிவே மனிதனை மனிதனாக வாழ்வாங்கு வாழ வைக்கின்றது.


பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்ட நாம் துன்பம் தொலைய வேண்டும் இன்பம் பெருக வேண்டும் என்பதில் கருத்து ஒற்றுமை உடையவர்களாய் இருக்கின்றோம். துன்பத்திற்குக் காரணம் அறியாமை இன்பத்திற்குக் காரணம் அறிவுடைமை. அறியாமையை அகற்ற அகற்ற துன்பம் நீங்கும். அறிவு வளர வளர இன்பம் பெருகும் அறியாமையை அகற்றி அறிவை வளர்க்கச் சிறந்த அறிவு நுல்களை விருப்பமுடன் கற்றுணர வேண்டும். அறிவு நிறைந்த சான்றோர்களுடன் பழக வேண்டும். 


எனவே நாம் ஒவ்வொருவரும் கற்க வேண்டிய அறிவு நூல்களைக் கசடறக் கற்றுணர்ந்தும் கற்ற வல்ல அறிஞர்களோடு பழகியும் சான்றாண்மை மிக்க பெரியவர்களைத் துணையாகக் கொண்டும் நம்முடைய அறியாமையை அகற்றி அறிவை நிரம்பப் பெற்று இன்புற்று வாழ்வோமாக!


தேவராசு 



உறவுகள்




                                             



எவ்வாறுஒரு நூலிழை உதிரி மலர்களை சேர்த்திணைத்து அழகிய மாலையாக மாற்றுகின்றதோ அதைப்போலத்தான் தனித் தனியான மனிதர்களை உறவென்னும் நூலிழை ஒன்று சேர்த்துக் குடும்பம் என்னும் அழகிய அமைப்பை உருவாக்குகின்றது. ஆனால் இன்றோ உறவுகள் பேணப்படாமல் சிதைந்துவருவதனால் குடும்ப அமைப்புகளும் நலிந்துச் சிதைவுற்று வருகின்றன.மனிதர்கள்தீவுகளைப்போல் இருந்துகொண்டு ஒருவரோடொருவர் பேசுவதற்குக் கூட நேரமில்லாமல் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. தான், தன்வசதி, தனக்குமட்டும் என்னும் சுயநலத்தால், பணம் ஒன்றே வாழ்வின் குறிக்கோளாக மாறி மனிதம் தொலைந்து கொண்டிருக்கின்றது. "செல்வர்க்கு அழகு செழுங்கிளைத் தாங்குதல்" என்பது முதுமொழி. நமக்கோ, எத்தனை செல்வம் வந்தாலும் அதற்கேற்ப நம் தேவைகளும் நிறைவடையாமல் கூடிக் கொண்டேதான் போகின்றன. இந்நிலையில் நாம் எங்கே செழுங்கிளைத் தாங்குவது? உறவினர்களுக்கு இன்னல் வந்த காலத்தில் உதவி செய்தலே மனிதப் பண்பு. ஆனால், உறவுகளைக் கொண்டாடினால் தனக்கு எங்கே இடையூறாகப் போய்விடுமோ! என்றே இன்றைய தலைமுறை சமுதாயம் உறவுகளை விட்டு விலகியே நிற்கின்றது.


பெற்ற தாய் தந்தையரையே பாரமாக நினைக்கும் இக்காலத்தில் உடன்பிறந்தோர் மற்றும் அத்தை, மாமா, சித்தப்பா, பெரியப்பா போன்ற உறவுகளையும் நினைப்பதற்கு நேரம் கூட இல்லை ,அவர்களைப் பற்றி நினைப்பதற்கு விரும்புவதும் இல்லை.இன்னும் சொல்லப் போனால், குடும்பத்திற்கு ஓரிரு குழந்தைகள் என்று ஆகிவிட்ட இந்நாட்களில் அத்தகைய உறவுகள் அருகியும் போய்விட்டன. "ஒரு ஊரில் ஒரு ராஜா" என்பதைப்போல உறவின் முறைகளையும் கதைகளின் வாயிலாக மட்டுமே அறிந்துகொள்ளும் நிலைமை உருவாகிக் கொண்டிர்ருக்கின்றது. பெரும்பாலும் எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய தாத்தா, பாட்டி உறவுகளின் நெருக்கத்தையும் இன்றைய குழந்தைகள் உணர்வதற்கும் அனுபவிப்பதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதனால் குழந்தைகள்,தம்வாழ்க்கை முழுவதற்கும் பயன்படக் கூடிய, ஆரோக்கியமான எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும் கற்றுக்கொள்ளத் தவறிவிடுகின்றனர். ஆண் பெண் என இருவரும் வேலைக்குச் செல்லும் இக்காலத்தில், 'இடமாற்றம்' தவிர்க்க முடியாத அவசியமான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் , பெரியவர்களோடு ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதென்பது இயலாத ஒன்று. பெரும்பாலான இளம் பெற்றோர்களுக்கும் இதுவே மகிழ்ச்சியையும் அளிக்கின்றது. இயந்திரத் தனமான சூழ்னிலையில்,வளர்க்கப்படும் குழந்தைகள், மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்தல், அன்புசெய்தல், பெரியவர்களை மதித்து நடத்தல்,அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல் போன்ற தன்மைகள் இன்றி, மிகவும் பிடிவாதக்காரர்களாகவும் சுயநலக் காரர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.தன்னுடைய பெற்றோர்களை மட்டுமே அறிந்த குழந்தைகள் வெளியில் செல்ல ஆரம்பித்தவுடன் தனக்காக நண்பர்களைத் தேடிக்கொள்கின்றார்கள். நட்பு என்பதும் இனிமையானதுதான்.ஆனால் நட்புவட்டம் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று அவ்வப்போது மாறுவதற்கு வாய்ப்புண்டு.ஆரம்ப கால நண்பர்கள் கடைசி வரைக்கும் நண்பர்களாக நீடிப்பதில்லை; ஆனால்,உறவுகள் அப்படியல்ல. கணவன் மனைவி உறவைத் தவிர மற்ற உறவுகள் நம் ஆரம்ப காலம் முதல் நம்முடன் தொடர்ந்தே வருபவை.நம்முடைய வாழ்க்கைத் துணையை மட்டும்தான் இடைக்காலத்தில் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தாம் வாழ்க்கையில் இணைந்ததைப் புனிதமான உறவாக நினைத்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துத் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, ஒருவர்க்காக மற்றவர் வாழ்ந்த காலத்தில் வாழ்க்கை இனிமையானதாகக் குடும்பங்களும் செழித்தன. ஆனால், இன்று கணவனும் மனைவியும் நண்பர்களாக, அவரவர் விருப்பங்கள் அவரவரோடு இருக்க எல்லைகளை வகுத்துக் கூட்டுச் சேர்ந்து வாழும் வாழ்க்கையில், சிறுசிறு குறைகளைக்கூடப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் பிரிந்துவிடுகின்றனர். உறவுகளை ஒதுக்கித் தள்ளி விட்டு, நண்பர்களை உறவின் முறைகளைச் (மாமா, மச்சான், மாப்பிள்ளை)சொல்லி அழைப்பதே இன்றைய நாகரிகமாகிவிட்டது. மேற்போக்கான இதுபோன்ற செயல்களால் இன்றைய இளைய சமுதாயம் எங்கோ போய்க்கொண்டிருக்கின்றது. உறவுகளுக்குள் இழையோடிக் கொண்டிருக்கும் மென்மையான பாசம் என்னும் உணர்வே மனிதம் மடிந்து போகாமல் காக்கின்ற வேராக இருக்கின்றது. சிறுசிறு இடைஞ்சல்கள் இருந்தாலும் இதனை உணர்ந்து இன்றைய இளைய தலைமுறையினர் ,தம் குழந்தைகளுக்குத் தாமே வாழ்க்கையின் எடுத்துக் காட்டாக இருந்தால்தான், வருங்காலச் சமுதாயம் மனஅழுத்தம், மனஉளைச்சல் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் அமைதியாக வாழ வழி வகுக்கும் என்பதுதான் உண்மை!


சரோஜா தேவராஜு

dimanche 24 février 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                          

அன்புடையீர்,

வணக்கம். 'பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா' என்றான் பாரதி!பூவின் மணம் போல், தென்றலின் இதம் போல், நிலவின் குளுமை போல் வாழ்க்கையை ரசிக்க வைப்பவள் பெண். ஒரு கவிதையைப் போல நெஞ்சை வருடி இன்பமூட்டுபவள் .  ஓவியம் போல நடமாடி கருத்தை நிறைப்பவள். சிலையாக நின்று கண்ணைக் கவர்பவள். அவளை ரசிப்பதில் தவறேதும் இல்லை.  

ஆனால் இவற்றை விட அவள் உயிரும், உணர்வும் உடைய ஒருத்தி. அவள் விரும்பிய வண்ணம்  வாழ அவளுக்கு உரிமை உண்டு. அதிலும் மனமும், எண்ணங்களும், ஆசைகளும் கொண்ட அவளது உடல் அவளுக்கே சொந்தமானது.  அதை அவள் விரும்பி ஒருவனுக்கு அர்ப்பணிக்கும் போதுதான் அவன் வாழ்வும் பூரணமடைகிறது.வழங்குதலும், பெறுதலுமாக   இணைதல்  சிறக்கிறது. அதுவே இல்லறமாகி இன்பம் வளர்கிறது. உலகம் செழிக்கிறது. இயற்கை நிறைவடைகிறது.

மாறாக வலிந்து முகர நினைக்கும்போது அந்த மென்மலர் தன் அழகிய இதழ்களை உதிர்த்து விடுகிறது. மனக்கசந்த பின் அதில் மணமில்லை! அவள் உள்ளக் கதவுகள் மூடிக் கொண்டபின், அங்கு நடக்கும் நிகழ்வுக்கு பொருளில்லை; சிறப்பும் இல்லை. ஆழ்ந்து யோசித்தால் அதில் இன்பமுமில்லை! இதை ஆண்கள் உணர்ந்து விட்டால், கண நேர வடிகாலாக பெண்களைப்  பார்க்க மாட்டார்கள்.

இதில் இன்னொரு அபாயம் உள்ளது. நசுக்கப்படும் எந்த உயிருக்கும் இயல்பாகத் தோன்றும் எதிர்ப்புணர்ச்சி! தனிப்பட்ட ஒருத்தி வலுவின்றி, தோற்று, நலிந்து, அழிந்து விடலாம்.  ஆனால் அவளது அழிவு  நடுகின்ற  சோகம் ஆழமானது. அதன் விளைவாக வளர்கின்ற நியாயமான கோபமும், வன்மமும் பறந்து விரிந்தது. சாதாரணமாகவே பெண்மை சக்தி கொண்டது. உள்ள பலம் உடையது . அது புயலாகி விட்டால் அழிவு சமூகத்திற்குத்தான். காலங்காலமாய் அடங்கியிருந்த பெண்மை, இந்த நூற்றாண்டில்  தலை நிமிர்த்த ஆரம்பித்திருப்பது கண்கூடு. அதில் சற்றே தீவிரம் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.  தூண்டி விடுவதற்குப் பதிலாக அவர்களை அவர்களுக்கு உணர்த்தியும், உறவைச் சமப்படுத்த விட்டுக்கொடுத்து, மதித்து, போற்றவும் செய்தால், உலகு அமைதிப் பூங்காவாக விளங்கும். உறவும் மணம் பரப்பும்!

திருமதி சிமோன்